எல்லையில் பதற்றம் நீடிப்பு: ரஷ்யா-உக்ரைன் ராணுவம் தீவிர போர் பயிற்சி

மாஸ்கோ:

ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில் உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேர விரும்புகிறது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷியா உக்ரைனை நேட்டோ படையில் சேர்க்கக் கூடாது என்று அமெரிக்காவை வலியுறுத்தி வருகிறது.

மேலும் எல்லையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை குவித்துள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கும் என்று தெரிவித்துள்ள அமெரிக்கா ரஷியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைனை தாக்கினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று ரஷியாவை அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரித்துள்ளார்.

ஆனாலும் எல்லையில் ரஷியா தனது படைகளை வாபஸ் பெறாமல் அங்கு ஆயுதங்களை குவித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையடுத்து கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகளுக்கு உதவுவதற்காக அமெரிக்கா கூடுதலாக 3 ஆயிரம் வீரர்களை அனுப்பி உள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரஷியா எல்லையில் தனது போர் பயிற்சியை தீவிரப்படுத்தி உள்ளது. அந்நாட்டின் முப்படைகளும் மும்முரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதே போல் உக்ரைன் ராணுவமும் போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டு ராணுவம் அமெரிக்கா தயாரித்த ஆயுதங்களுடன் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு உக்ரைனில் உள்ள யாவோரிவ் ராணுவ தளத்தில் அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள் மற்றும் பிற ராணுவ ஆயுதங்களுடன் போர் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து உக்ரைன் நாட்டு பாதுகாப்பு துறை மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் கூறும்போது, “அமெரிக்காவில் இருந்து விமானத்தில் ஆயுதங்கள் விரைவில் உக்ரைனுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

ரஷியா-உக்ரைன் எல்லையில் பதட்டமான சூழ்நிலை கடந்த ஒரு மாதமாகவே நீடித்து வருகிறது. பதட்டத்தை குறைக்க பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருகின்றன. ஆனாலும் அங்கு போர் சூழல் நீடித்தபடியே இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.