ராமானுஜர் சிலை திறப்பு: பிரதமருக்கு வரவேற்பு; தெலங்கானா முதல்வர் புறக்கணிப்பு

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள ராமானுஜரின் 216 அடி உயர ‘சமத்துவ சிலை’ திறப்பு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்காமல் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்தார்.

ஹைதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில், வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இடத்தில் பத்ம பீடத்தின் மீது 216 அடி உயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை இன்று திறந்து வைக்கப்படvuள்ளது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

ரூ.1,000 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆஸ்ரமத்திற்கு தற்போது தெலங்கானா, ஆந்திரா, தமிழகம், கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வேத பண்டிதர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மேலும், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து தன்னார்வலர்கள் சேவை செய்ய திரண்டு வருகின்றனர். இதுதவிர அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்தும் இங்கு தொண்டு செய்ய வந்துள்ளனர். பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவிற்காக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஹைதராபாத் நகருக்கு விமானம் மூலம் வந்தார். ஆனால், பிரதமரை வரவேற்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் விமான நிலையம் வரவில்லை. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தெலங்கானா அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மோடியை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

அதேசமயம் மாலையில் நடைபெறும் விழாவில் சந்திரசேகர் ராவ் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது. இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் மாநில முதல்வர் வரவேற்காமல் புறகணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னர் ஹைதராபாத்தில் உள்ள வறண்ட வெப்பமண்டலத்திற்கான சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICRISAT) 50வது ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அவருடன் ஆளுநர் தமிழிசையும் பங்கேற்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.