சுமார் 100 கோடி ரூபாய் மோசடி., முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.!

தமிழ்நாடு கிராம வங்கியின் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கிளைகள் சிலவற்றில் கடன் பெற்ற ஆயிரக்கணக்கான பெண்கள் செலுத்திய கடன் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தாமல் CRD என்ற தொண்டு நிறுவனம் மோசடி செய்துள்ளதால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாதிப்படைந்துள்ளனர். 

இதுபற்றி முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றும், தவறிழைத்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், நியாயமாக கடனை திருப்பி செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று (5.2.2022) முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது இருப்பதாவது, “தமிழ்நாடு கிராம வங்கியின் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கிளைகள் சிலவற்றில் கடன் பெற்ற ஆயிரக்கணக்கான பெண்கள் செலுத்திய கடன் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தாமல் Center for Rural Development (CRD) என்ற அரசு சாரா நிறுவனம் மோசடி செய்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக நியாயமாக கடனை கட்டிய பெண் கடனாளிகளை மீண்டும் கடனைக் கட்டச் சொல்லி தமிழ்நாடு கிராம வங்கி துன்புறுத்துவதாகாவும், அவர்கள் மீது வழக்கு தொடுப்பதாகவும் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

தமிழ்நாடு கிராம வங்கியால் இவ்வாறு மாநிலம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் இத்தகைய கடன் வழங்கும் மற்றும் வசூல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவ்வாறு கொடுக்கப்பட்ட கடன் தொகையின் நிலுவை சுமார் 1000 கோடி ரூபாய். CRD போன்றே மேலும் சில அரசு சாரா நிறுவனங்கள் இது போன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அதன் காரணமாக 50,000க்கும் மேற்பட்ட பெண் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மோசடி செய்யப்பட்ட தொகை ரூபாய் சுமார் 100 கோடி இருக்கும் என்றும் தெரிகிறது.

மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுப் பொறுப்பு குழுக்கள் மூலமாக பெண்களுக்கு கடன்  கொடுப்பதற்கும், கொடுத்த கடனை வசூலிப்பதற்கும் இந்த CRD என்னும்  அரசு சாரா நிறுவனத்தை பயன்படுத்தி வந்திருக்கிறது தமிழ்நாடு கிராம வங்கி. இந்த நிறுவனம் மக்களிடம் வசூலித்த கடன் நிலுவைத் தொகையினை முறையாக வங்கியில் செலுத்தாமல் கையாடல் செய்திருப்பதாக தெரிகிறது. கடன் திரும்ப செலுத்தப்படாமல் இருந்ததால், வங்கியிலிருந்து நேரடியாக கடன் வாங்கிய பெண்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. 

ஆனால், உண்மையில் இந்த நிறுவனம் கடன் வசூல் தொகையில் மோசடி செய்திருக்கும் விவகாரம் கடந்த ஆண்டு 2021 மார்ச் மாதமே வங்கியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அப்போதே அந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து நியாயம் கேட்டிருக்கின்றனர்; அப்போது வங்கியின் உயரதிகாரிகள் காவல் துறையினர் முன்னிலையில் ”மோசடியில் ஈடுபட்ட அந்த CRD நிறுவனத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து, அந்த நிறுவனம் கையாடிய தொகையினை அவர்களிடமிருந்து வசூலித்துக் கொள்வோம் என்றும், கடனை திருப்பிக் கட்டியவர்களை மீண்டும் கடனை கட்டச் சொல்லி நிர்பந்திக்க மாட்டோம்” என்றும் உறுதியளித்திருக்கிறார்கள். ஆனால், தற்போது தமிழ்நாடு கிராம வங்கி ஏற்கனவே கடனை திருப்பி செலுத்தியவர்கள் மீது நீதிமன்ற வழக்கு தொடுத்து, கடன் வசூல் நடவடிக்கை மேற்கொள்கிறது.

துவக்கத்திலிருந்தே CRD  நிறுவனத்தின் ஊழியர்கள் வங்கியின் அதிகாரிகளைப் போலவே நடந்திருக்கிறார்கள்; கடன் வாங்கிய பெண்களிடம் அடாவடியாகவும், அத்துமீறியும் நடந்திருக்கிறார்கள்; அவர்களிடமிருந்து கால்நடைகளைக் கூட ஜப்தி செய்திருக்கிறார்கள். தொண்டு நிறுவன ஊழியர்களின் இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற, அடாவடி வசூல் நடவடிக்கைகளால் மன உளைச்சலுக்கு ஆளான சில பெண்கள் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளனர்.

ஒன்றிய அரசு, தமிழ்நாடு மாநில அரசு மற்றும் இந்தியன் வங்கி ஆகியவற்றுக்கு சொந்தமான ஒரு பொதுத்துறை வங்கியான தமிழ்நாடு கிராம வங்கி இது போன்ற மோசடி தொண்டு நிறுவனங்களுடன் வணிகக் கூட்டு வைத்துக் கொள்வதும், வசூலான பணத்தை கையாடல் செய்ய அனுமதிப்பதும், வாடிக்கையாளர்களிடம் அடாவடியாக வசூல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் ஏற்புடையதல்ல.

தொண்டு நிறுவனத்தின் மோசடியால் நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுத் தரும்படி எங்களை அணுகினார்கள். அவர்கள் தெரிவித்த தகவலின்படி இவ்வாறாக ஊசுனு தொண்டு நிறுவனத்தால் மோசடி செய்யப்பட்ட தொகை ரூபாய் 8 கோடிக்கு மேல் இருக்கும் என்றும், இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 4000க்கும் கூடுதலாக இருக்கும் என்றும் தெரிய வருகிறது.

ஆகவே, தாங்கள் இது பற்றி முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், மோசடியில் ஈடுபட்ட அரசு சாரா நிறுவனங்கள் மீதும், கவனக்குறைவாக செயல்பட்டதற்காகவும், அவர்களுக்கு இந்த மோசடியில் பங்கிருந்தால் அதற்காகவும் தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நியாயமாக கடனை திருப்பி செலுத்திய வாடிக்கையாளர்களை பாதுகாக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அந்த கடிதத்தில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.