மும்பை:
இந்தி திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் (வயது 92) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த சில தினங்களாக லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக் கிடமாகவே இருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலை சற்று சீரடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இன்று காலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். மத்திய மந்திரி நிதின் கட்காரி அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்தார். லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
பின்னர் சிறிது நேரத்தில் லதா மங்கேஷ்கர் காலமானதாக தெரிவிக்கப்பட்டது. லதா மங்கேஷ்கர் உயிரிழந்துவிட்டதாகவும், அவரது ஆன்மா அமைதியடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவரது சகோதரி உஷா மங்கேஷ்கர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார். லதா மங்கேஷ்கர் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
லதா மங்கேஷ்கருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா மற்றும் பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது