இளவரசர் சார்லஸ் மனைவி கமிலாவுக்கு ராணி பட்டம் இங்கிலாந்து ராணி விருப்பம்

லண்டன் :

இங்கிலாந்து நாட்டில் ராணியாக இருப்பவர், 2-ம் எலிசபெத் மகாராணி (வயது 95). இங்கிலாந்து மன்னராக இருந்த ஆறாம் ஜார்ஜின் மகள் இவர். மன்னர் ஆறாம் ஜார்ஜ், 1952-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி மறைந்த பின்னர், 2-ம் எலிசபெத் ராணி பட்டத்துக்கு வந்தார். அப்போது அவருக்கு வயது 25.

தற்போது அவர் ராணி பட்டத்துக்கு வந்து 70 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி இங்கிலாந்து முழுவதும் வரும் ஜூன் மாதம் பிரமாண்ட கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.

இந்தநிலையில் எலிசபெத் மகாராணி தான் பட்டத்துக்கு வந்ததின் 70-வது ஆண்டு விழாவை சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் நேற்று தனிப்பட்ட முறையில் கொண்டாடினார். இதையொட்டி அவர் நாட்டு மக்களுக்கு ஒரு செய்தி விடுத்தார்.

அந்த செய்தியில் அவர், ‘‘உங்கள் அனைவரின் ஆதரவுக்காகவும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் என்மீது தொடர்ந்து காட்டி வரும் விசுவாசத்துக்கும், பாசத்துக்கும் நான் எப்போதும் நன்றிக்கடன் உள்ளவளாக இருப்பேன்’’ என கூறி உள்ளார்.

இவர் ராணி என்ற அந்தஸ்தில் இங்கிலாந்தில் 14 பிரதமர்களை பார்த்திருக்கிறார்.

தான் பட்டத்துக்கு வந்து 70 ஆண்டுகள் ஆகியுள்ள இந்த தருணத்தில் எதிர்காலத்தில் ராணி பட்டம் யாருக்கு என்பதை அவர் கைகாட்டி உள்ளார்.

இதையொட்டி அவர் குறிப்பிடுகையில், “சார்லஸ் மன்னர் ஆகிறபோது, ராணி பட்டத்தை கமிலா பெற வேண்டும் என்பது எனது உண்மையான விருப்பம்” என தெரிவித்தார்.

எனவே தற்போதைய இளவரசர் சார்லஸ் இங்கிலாந்தில் மன்னர் பட்டம் ஏற்கிறபோது, கமிலாவுக்கு ராணி பட்டம் வந்து சேரும். 2-ம் எலிசபெத் மகாராணியின் இந்த அறிவிப்புக்கு இளவரசர் சார்லசும், இளவரசி கமிலாவும் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

சார்லஸ் மன்னராகிறபோது, அவரது மனைவி கமிலா தானாகவே ராணியாக மாறுவது இயல்பான ஒன்றுதானே என்ற கருத்து எழும்.

சார்லஸ், கமிலா இருவருமே தங்கள் முந்தைய வாழ்க்கைத் துணைவர்களை விவாகரத்து செய்து மறுமணம் செய்தவர்கள் என்பதால் இதில் சந்தேகங்கள் எழுந்தன. பல்வேறு விதமான கருத்துகளும் கூறப்பட்டன.

சார்லஸ் மன்னரானாலும், கமிலா ‘கன்சார்ட் இளவரசி ’ என்றே அழைக்கப்படுவார் எனவும் கூறப்பட்டது.

இப்போது 2-ம் எலிசபெத் மகாராணியே கமிலாவை ராணி என அழைக்கவே விருப்பம் என்று கூறி விட்டதால் இனி அவர் ராணி பட்டம் பெறுவதில் பிரச்சினை ஏதும் இருக்காது.

2-ம் எலிசபெத் மகாராணி பட்டத்துக்கு வந்ததன் 70-வது ஆண்டுவிழாவையொட்டி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் வெளியிட்ட செய்தியில், “தனது 70 ஆண்டு கால ஆட்சியில், அவர் இந்த தேசத்துக்கான உத்வேகமான கடமை உணர்வையும், அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் காட்டி உள்ளார்” என புகழாரம் சூட்டி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.