குமாரபாளையத்தில் பட்டு ஜவுளி ரகம் உற்பத்தி நிறுத்தம்: தினமும் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு; 50,000+ பேர் வேலையிழப்பு

நாமக்கல்: குமாரபாளையத்தில் பட்டு ஜவுளி ரக உற்பத்தி நிறத்தத்தால் நாள்தோறும் நடைபெறும் ரூ.5 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்ட்டுள்ளதுடன், 50,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என குமாரபாளையம் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் நாகராஜன் தெரிவித்தார்.

குமாரபாளையத்தில் 3,000 மேற்பட்ட கைத்தறிக் கூடங்கள் உள்ளன. இங்கு கைத்தறி ஆடை மற்றும் பட்டு ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. நேர்த்தியான முறையில் பட்டு ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுவதால் இவற்றுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டு ஜவுளி ரகங்கள் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுதி செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் நாள்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகமும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பட்டு ஜவுளி ரகங்களின் தொடர் விலையேற்றம் காரணமாக உற்பத்தி செய்யப்பட்ட பட்டு ஜவுளி ரகங்களை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இழப்பை ஈடு செய்ய இம்மாதம் 7-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு பட்டு ஜவுளி ரக உற்பத்தியை நிறுத்தி வைப்பது என பட்டு ஜவுளி உற்பத்தியாளர் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி இன்று முதல் குமாரபாளையத்தில் பட்டு ஜவுளி உற்பத்திக் கூடங்களில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதுடன், இதை சார்ந்து வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

இதுகுறித்து குமாரபாளையம் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் நாகராஜன் கூறும்போது, ”பட்டு கிலோ 3 ஆயிரம் இருந்தது, தற்போது ரூ. 6 ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளது. ஜரிகை ஒரு மார் ரூ.350-லிருந்து ரூ. 750 ஆக உயர்ந்துள்ளது. வார்ப்பு பட்டு கிலோ ரூ. 4,500-லிருந்து ரூ.7 ஆயிரமாக உயர்ந்துள்ளது. எனவே உற்பத்தி செய்யக்கூடிய ஜவுளி ரகங்களை ஆர்டர் எடுத்த விலைக்கு விற்க முடியாத நிலை ஏற்படுகிறது.

தொடர்ந்து எந்த விலைக்கு ஆர்டர் எடுப்பது என்றும் புரியாத நிலையும் உள்ளது. தை, மாசி மாதங்களில் திருமண முகூர்த்தங்கள்,திருவிழாக்கள் அதிகம் இருக்கும் நிலையில் பட்டு சேலை வியாபாரம் கேள்விக்குறியாகி உள்ளது. குமாரபாளையத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் செயல்பட்டு வருகிறது.

இந்தக் கடுமையான விலை உயர்வால் இதனை நம்பி வாழும் கைத்தறி மற்றும் சாய தொழில், அட்டை அடிப்பவர்கள், உள்ளிட்ட இதர சார்பு தொழில்களை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த உற்பத்தி நிறுத்தத்தால் நாள்தோறும் ரூ.5 கோடி மதிப்பில் நடைபெறும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டு ஜவுளி ரக மூலப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.