ஐரோபிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு பிரசல்ஸ், 08/02/2022

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசிற்கும் இடையிலான 24 ஆவது கூட்டு ஆணைக்குழு கூட்டம் 08 பெப்ரவரி 2022 அன்று பிரசல்ஸில் இடம்பெற்றது. சினேகபூர்வமானதும் வெளிப்படையானதுமான சூழலில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் இருதரப்பு உறவுகள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், ஆளுகை, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் முதல், இருதரப்பு நலன்கள் சம்பந்தமான வர்த்தகம், அபிவிருத்திக் கூட்டுறவு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல், பிராந்திய ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத தடுப்பு மற்றும் பல்தரப்பு மன்றங்களில் கூட்டுறவு வரையிலான பரந்துபட்ட விடயங்கள் குறித்த கண்ணோட்டங்களும் புதுப்பித்தல்களும் பரிமாறப்பட்டன.

கொவிட்-19 நோய்ப்பரவலைப் பொறுத்தவரையில், இலங்கையின் திறமையான தடுப்பூசி திட்டத்தினை ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டியது. தொற்றுநோயால் அதிகரித்துள்ள பாதிப்புகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்திசெய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டிய ஐரோப்பிய ஒன்றியம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு கொவிட்-19 தடுப்பூசியை நியாயமான மற்றும் சமமான முறையில் அணுகுவதற்கான அதன் உறுதிப்பாட்டை வலியுறுத்தியது. உலகளாவிய தடுப்பூசி சமத்துவத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ச்சியான பங்களிப்பை இலங்கை பாராட்டியது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கையில் அபிவிருத்திகள், பொருத்தமான நடவடிக்கைகள் மற்றும் சட்ட முன்முயற்சிகள் போன்றவை பற்றிய புதுப்பிப்புகளுக்கான வாய்ப்பினை இக்கூட்டம் வழங்கியது. ஜனநாயகம், ஆளுகை, சட்டத்தின் ஆட்சி, சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள் உள்ளிட்ட மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், கருத்துச் சுதந்திரம் மற்றும் சங்கம் ஆகியவை குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

நல்லிணக்கம் தொடர்பாகவும், குறிப்பாக, காணாமல் போனோர் அலுவலகம் (OMP), இழப்பீடுகளுக்கான அலுவலகம் (OR), தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR), மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) ஆகிய சுயாதீன நிறுவனங்களின் முன்னேற்றம் குறித்து இலங்கை தெரிவித்தது. மனித உரிமைகள் கழகத்துடனும் அதன் பொறிமுறைகளுடனும் தொடர்ந்தும் ஈடுபாட்டுடனும் ஒத்துழைப்புடனும் இருக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை வலுவாக ஊக்குவித்தது. இப்பின்னணியில், சுயாதீன நிறுவனங்கள் சுதந்திரமாகவும் செயற்றிறனுடனும் இயங்கவேண்டியதன் முக்கியத்துவத்தினை ஐரோப்பிய ஒன்றியம் கோடிட்டுக்காட்டியது. சிவில் சமூகத்தை வலுப்படுத்துவது குறித்தும் அவை அனைத்து பன்முகத்தன்மையுடனும் செயற்படுவதற்குத் தேவையான வசதிகள் வழங்கப்படவேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஒப்புக்கொண்டன. நீதி சீர்திருத்தம் மற்றும் நல்லிணக்கத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியது.

கடமைகளை நிறைவேற்றுவதில் மக்களிடையே அளவிடக்கூடிய, உறுதியான மற்றும் மெய்ப்பிக்கத்தக்க முடிவுகளை அடைவதற்கான தனது நோக்கத்தை இலங்கை மீண்டும் வலியுறுத்தியது. இப்பின்னணியில், இலங்கை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தின் திருத்தங்களை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றது. ஆனபோதிலும், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட திருத்தச் சட்டத்தில் முக்கியமான அம்சங்கள் உள்ளடக்கப்படவில்லை என்பதை ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டது. சர்வதேச விதிகளுக்கு முற்றாக அமைவாகும் வண்ணம் பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை இலங்கை குறித்துக்கொண்டது.

இதற்கிடையில், பொலிஸ் மா அதிபர் வழங்கிய உத்தரவுகளின் வடிவில் எடுக்கப்பட்ட நிருவாக நடவடிக்கைகளை கவனத்தில் எடுத்துக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாட்டைத் தொடர்ந்து குறைக்குமாறும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல் ஜாமீன் வழங்குவதற்கான நடைமுறைக்கேற்ற மற்றும் நிருவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கையை வலியுறுத்தியது.

26 ஜனவரி 2022 அன்று மெய்நிகராக இடம்பெற்ற வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டுறவுக்கான பணிக்குழுவின் முடிவுகளை இந்த இணைப்பு ஆணைக்குழு ஆய்வு செய்தது. இருதரப்பு வர்த்தக உறவுகளின் முக்கியத்துவத்தினை ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் குறித்துக்கொண்டன. இது சம்பந்தமாக, பல ஐரோப்பிய தயாரிப்புகள் இலங்கை சந்தைக்குள் நுழைவதைத் தடுக்கும் இறக்குமதி கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்குமாறு இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக வலியுறுத்தியது. உலகளாவிய நோய்ப்பரவல் தாக்கத்தின் விளைவாக, அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக, ஒரு இடைக்கால நடவடிக்கையாகவே அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு தற்காலிக இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக இலங்கை தெளிவுபடுத்தியது. இந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியானதும் முன்னேற்றகரமானதுமான மீளாய்வுக்கு உட்பட்டவை என இலங்கை குறிப்பிட்டது.

நாட்டில் நிலையான அபிவிருத்திக்கு ஜிஎஸ்பி பிளஸ் திட்டமுறையின் பெறுமதிமிக்க பங்களிப்பை இலங்கை பாராட்டியது. செப்டம்பர் 2021 இல் ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்பு பணியின் போது இலங்கை பங்குதாரர்களின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டது. ஜிஎஸ்பி பிளஸ் திட்டத்தில் உள்ளடங்கிய மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் நல்லாட்சி தொடர்பான 27 சர்வதேச ஒப்பந்தங்கள் தொடர்பான இலங்கையின் இணக்கப்பாட்டை இருதரப்பினரும் மீளாய்வு செய்தனர். இந்த 27 ஒப்பந்தங்களையும் திறமையாக நடைமுறைப்படுத்துவதில் தனது அர்ப்பணிப்பினை வலியுறுத்திய இலங்கை, பாகுபாடின்மை கொள்கையைக் கடைப்பிடித்தல், தொழிலாளர் உரிமைகளை நடைமுறைப்படுத்துவதிலுள்ள எந்தவிதமான மேலதிக தடைகளையும் அகற்றுதல் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் ஆகியவற்றையும் குறிப்பிட்டது. இந்த வளர்ச்சிகள் குறித்து மேலும் புதுப்பித்தல்களை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் கேட்டுக்கொண்டது.

இந்த இணைப்பு ஆணைக்குழு, 02 பெப்ரவரி 2022 அன்று இடம்பெற்ற அபிவிருத்திக் கூட்டுறவு குறித்த பணிக்குழுவின் முடிவுகள் குறித்தும் கலந்துரையாடியது.

இப்பணிக்குழு ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை அபிவிருத்திக் கூட்டுறவின் அனைத்து அம்சங்களையும் மீளாய்வு செய்ததுடன், 2021-2027 இற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்-வருடாந்த குறிகாட்டு திட்டத்தின் (எம்ஐபி) முன்னுரிமைகள் குறித்து விவாதித்தது. மேலும், கொவிட்-19 பாதிப்புக்கான உதவிகள் உட்பட, 2021 இல் பின்பற்றப்பட்ட இடையீடுகள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.

பசுமை மீட்சி மற்றும் அனைத்தையும் உள்ளடக்கியதும் அமைதியானதுமான சமூகம் ஆகியவை குறித்துக் கவனம் செலுத்தும் பல்-வருடாந்த குறிகாட்டு திட்டம் (எம்ஐபி), இலங்கையின் அபிவிருத்தி முன்னுரிமைகளை ஆதரிப்பதுடன், ஐரோப்பிய பசுமை ஒப்பந்தத்தின் வெளிப்புற பரிமாணங்களுடனும் இந்தோ-பசிபிக் ஒத்துழைப்புக்கான ஐரோப்பிய ஒன்றிய மூலோபாயத்துடனும் ஒழுங்கமைவாகவுள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அபிவிருத்திக் கூட்டுறவினைப் பாராட்டிய இலங்கை, தனது தேசிய மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகளைப் பூர்த்திசெய்யவேண்டியதன் தேவையை வலியுறுத்தியது. ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் பல்-வருடாந்த குறிகாட்டு திட்டத்தின் கீழ், கூட்டு முன்னுரிமைகளில் இணைந்து பணியாற்றுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தின.

சட்டவிரோதமான, வெளிப்படுத்தப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி நடைமுறைகளைத் தடுப்பதிலும் நீக்குவதிலும் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவம், கூட்டாண்மையின் கடமைகளை மதித்தல் ஆகியவற்றை ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஏற்றுக்கொண்டன.

புலம்பெயர்தல் மற்றும் மீள அனுமதித்தல் ஆகியவை தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

எரஸ்மஸ் பிளஸ் திட்டம் (Erasmus+ ), மேரி ஸ்க்லோடௌஸ்கா கியூரி (Marie-Sklodowska-Curie) திட்டம் மற்றும் ஹொரைஸன் யூரோப் (Horizon Europe) கட்டமைப்பு திட்டம் ஆகியவற்றின் கீழ் உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு ஆகியவற்றில் ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆராய்ந்தன.

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு ஒப்பந்தத்தின் (UNFCCC) கீழ் தேசிய ரீதியாக தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் மற்றும் இலட்சிய இலக்குகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பு தொடர்பான புதுப்பிப்பை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றது. காலநிலைச் செயற்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து இலங்கையுடன் இருதரப்பு ரீதியாகவும் பல்தரப்பு மன்றங்களிலும் நெருக்கமாக இணைந்து பணிபுரிவதை ஐரோப்பிய ஒன்றியம் எதிர்நோக்கியுள்ளது. இனிவரவுள்ள 27 ஆவது ஐ.நா காலநிலை மாற்ற மாநாடு (COP27) இற்கான முன்னுரிமைகள் குறித்த தத்தமது கருத்துக்களை இருதரப்பினரும் பரிமாறிக்கொண்டனர்.

பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத தடுப்பு சம்பந்தமாக தொடர்ச்சியான ஒத்துழைப்பு வழங்குவதை ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் மீளாய்வு செய்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) அமைப்பினை தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட பட்டியலில் வைத்திருப்பதற்காக இலங்கை ஐரோபிய ஒன்றியத்தினைப் பாராட்டியது. பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளில் சர்வதேச விதிகள் மற்றும் நியமங்களைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை இருதரப்பினரும் வலியுறுத்தினர்.

கடல்சார் தள விழிப்புணர்வில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான விருப்பத்தை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு மற்றும் பயனுள்ள பன்முகத்தன்மையை மேம்படுத்துவதில் கூட்டு முயற்சிகளைத் தொடர்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தன. பிராந்திய அபிவிருத்திகள் மற்றும் இந்து சமுத்திரத்தில் கூட்டுறவு குறித்தும் அவர்கள் விவாதித்தனர். 01 டிசம்பர் 2021 அன்று ஆரம்பிக்கப்பட்ட, உலகெங்கிலும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான முக்கிய முதலீடுகளுக்கான தனது புதிய திட்டமான Global Gateway ஐ ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்தது. இம்முயற்சி இலங்கையால் வரவேற்கப்பட்டது.

ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி பாவோலா பாம்பலோனி மற்றும் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே ஆகியோர் இக்கூட்டத்திற்கு இணைத் தலைமை தாங்கினர்.

பங்குடைமை மற்றும் அபிவிருத்தி குறித்த, 1995 ஆம் ஆண்டின் ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டுறவு உடன்படிக்கையை மேற்பார்வை செய்யும் இந்த கூட்டு ஆணைக்குழுவானது, பரந்துபட்ட இருதரப்பு மற்றும் பரஸ்பரம் நலன்களின் பல்தரப்பு விடயங்களைக் கையாள்கிறது. உடன்படிக்கையின் முறையான செயற்பாடு மற்றும் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தல், முன்னுரிமைகளை அமைத்தல் மற்றும் பரிந்துரைகளை வழங்குதல் ஆகியவை இதன் பணிகள் ஆகும்.

கூட்டு ஆணைக்குழுவின் விதிமுறைகளின் கீழ் நிறுவப்பட்ட மூன்று பணிக்குழுக்களும் அந்தந்த கூட்டங்களிலிருந்து அறிக்கைகளை வழங்கின: செப்டம்பர் 2021 இல் ஆளுமை, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் பற்றிய பணிக்குழு; ஜனவரி 2022 இல் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு விவகாரங்களுக்கான பணிக்குழு; மற்றும் பிப்ரவரி 2022 இல் அபிவிருத்திக் கூட்டுறவுக்கான பணிக்குழு.

Public Diplomacy Division
Foreign Ministry
Colombo – Sri Lanka

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.