ஹிஜாப் அணிவதால் மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது: மலாலா

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரி மாணவிகளை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது, ஹிஜாப் VS காவித்துண்டு என்ற மோதல் போக்கு உருவாகியுள்ளது. மாநில அரசு சீருடை அணிந்து வர வேண்டும் என  உத்தரவிட்ட நிலையில், இந்த விவகாரம் அந்த மாநில உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
உயர்நீதிமன்றம் மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விவகாரம் கர்நாடக மாநிலத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு பரவி விடக்கூடாது என தலைவர்கள் கவலை தெரிவித்து வர, மத்திய பிரதேசம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இதுகுறித்து கருத்து எழுந்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த நோபல் பரிசு வென்ற மலாலா யுசஃப்சாய், கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள ஹிஜாப் விவகாரம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் ‘‘கல்லூரி நம்மை கல்வியா- ஹிஜாப்பா? என்பதை தேர்வு செய்தும் கொள்ளும் நிலைக்கு தள்ளியுள்ளது. மாணவிகள் அவர்களுடைய ஹிஜாப் காரணத்தால் பள்ளிக்கு செல்ல அனுமதி மறுப்பது பயங்கரமானது. குறைவான அல்லது அதிகமான அளவில் அணிவதால் பெண்களின் புறக்கணிப்பு தொடர்கிறது. இந்தியத் தலைவர்கள் முஸ்லிம் பெண்களை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் ஒரு கல்லூரியில் நடைபெற்ற சம்பவம் குறித்து மலாலா கருத்து கூறியது, இந்த விவகாரம் உலக அளவில் விவாதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், இந்தியாவில் ஒரு மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து மலாலா கருத்து கூறுவது தேவையில்லாத சர்ச்சையை ஏற்படும் எனவும் கருதப்படுகிறது.
பாகிஸ்தான் நாட்டில் பிறந்த மலாலா குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான கல்வி, உரிமைக்காக குரல் கொடுத்தவர். இதனால் கடந்த 2012-ம் ஆண்து தனது 11 வயதில் தலிபான் பயங்கரவாதிகளில் சுடப்பட்டார். பின்னர் இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று உயிர்பிழைத்தார். இவருக்கு 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இளம் வயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.