"கேரளா போல மாறி விடும்".. வாயை விட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளும் யோகி!

உத்தரப் பிரதேச மக்கள் தவறு செய்தால், நமது மாநிலம்
கேரளா
போல, காஷ்மீர் போல, மேற்கு வங்காளம் போல மாறி விடும் என்று முதல்வர்
யோகி ஆதித்யநாத்
பேசியது சர்ச்சையாகியுள்ளது. பல்வேறு தலைவர்களும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குப் பதிவுக்கு முன்னதாக யோகி ஆதித்யநாத் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் உ.பி. மக்கள் வாக்களிக்கும்போது தவறு செய்து விடக் கூடாது. அப்படி தவறு செய்தால் உத்தரப் பிரதேச மாநிலம் கேரளாவைப் போல, காஷ்மீரைப் போல, மேற்கு வங்காளத்தைப் போல மாறி விடும் என்று கூறியிருந்தார்.

இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அது எப்படி பிற மாநிலங்களை யோகி இழிவுபடுத்திப் பேசலாம் என்று பலரும் வரிந்து கட்டிக் கொண்டு விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், யோகியின் வார்த்தையை வைத்தே அவரை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த
காங்கிரஸ்
எம்.பி. சசி தரூர் யோகியின் பேச்சுக்கு நக்கலாக பதில் கொடுத்துள்ளார். உ.பி. கேரளாவாக மாறினால் நல்ல கல்வி, சுகாதார சேவை உள்ளிட்ட எல்லாமே கிடைக்கும் என்று பதிலடி கொடுத்துள்ளார் சசி தரூர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் இதுதொடர்பாக பதிவு செய்த கருத்தில், நல்ல கல்வி, சுகாதாரம், அடிப்படைக் கட்டமைப்பு, சுற்று என எல்லாமே நல்லதாக நடக்கும். மதம், ஜாதியின் பெயரில் கொலைகள் நடக்காது என்று பதிலடி கொடுத்திருந்தார் பினராயி விஜயன்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தியும், யோகிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறுகையில், இந்தியாவின் பலமே அது ஒன்றியமாக இருப்பதுதான். இது கலாச்சாரங்களின் ஒன்றியம், இது வேறுபாட்டின் ஒன்றியம், இது மொழிகளின் ஒன்றியம், இது மக்களின் ஒன்றியம், இது மாநிலங்களின் ஒன்றியம். காஷ்மீர் முதல் கேரளா வரை, குஜராத் முதல் மேற்கு வங்காளம் வரை இந்தியா அழகானது. இந்தியாவின் ஆன்மாவை யாரும் அவமதிக்கக் கூடாது என்று பதிலடி கொடுத்துள்ளார் ராகுல் காந்தி.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இந்த விவகாரம் தொடர்பாக வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும் உ.பி. தேர்தல் பிரசாரத்தின்போது அவர் இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், எனது அரசு நிறையச் செய்துள்ளது. உ.பியில் உள்ள ஏழைகளுக்கு அந்த மாநில அரசு செய்ததை விட நாங்கள் நிறையவே செய்துள்ளோம் என்றார் மமதா.

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், உத்தரப் பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை விட காஷ்மீரில் நன்றாகவே இருந்தது. குற்றங்களும் கூட உ.பியை விட குறைவுதான். வளர்ச்சியிலும் உ.பியை விட மேம்பட்ட மாநிலம்தான் காஷ்மீர் என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.