ராகுல், பிரியங்காவை கிண்டலடித்த நிதி மந்திரி: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி :

பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பாராளுமன்ற மாநிலங்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பதில் அளித்துப் பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2013-ம் ஆண்டு, அலகாபாத்தில் வறுமை என்பது ஒரு மனநிலை என கூறியதாக கேலி செய்தார்.

இதுபற்றி காங்கிரசாரைப் பார்த்து நிர்மலா சீதாராமன் கூறும்போது, ‘‘உங்கள் முன்னாள் தலைவர் வறுமை என்றால் உணவு, பணம் அல்லது பொருள்பற்றாக்குறை என்று அர்த்தம் அல்ல. ஒருவருக்கு தன்னம்பிக்கை இருந்தால் வறுமையை வெல்ல முடியும் என்று ஞான உபதேசம் செய்தார்’’ என்றார்.

“நிர்மலா சீதாராமன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல என்பதால் அவருக்கு உண்மை நிலை தெரியவில்லை” என்ற காங்கிரஸ் தலைவரின் கூற்று, நிர்மலா சீதாராமனை கோபத்துக்குள்ளாக்கியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிர்மலா சீதாராமன், ‘‘அவர்கள் ஆட்சிக்காலத்தில் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் இருந்தது இல்லையா? இந்த சபையின் உறுப்பினராக இருந்த அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும் அடிப்படை உண்மை நிலையில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்தாரா?’’ என கேட்டார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியையும் பெயர் குறிப்பிடாமல் கேலி செய்தார். அவர் தனது முன்னணி அரசியல் இயக்கத்தை தேர்தலை சந்திக்கிற உத்தரபிரதேசத்தில் தொடங்கியதை நிர்மலா சீதாராமன் கிண்டல் செய்தார்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் முடிவுகள் 10, ஜன்பத்தில் (சோனியா காந்தி வீடு) எடுக்கப்பட்டு, 7, ரோஸ்கோர்ஸ் சாலையில் (அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கின் அதிகாரபூர்வ இல்லம்) அறிவிக்கப்பட்டதாக சாடினார். ‘‘அது ரிமோட் கண்ட்ரோல் செய்யப்பட்டதா, இல்லையா?” என்று கேட்டார்.

இந்த தருணத்தில் காங்கிரஸ் கட்சியை அவர் சாடுவதை எதிர்த்து மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறுக்கிட்டார். அவர், ‘‘பட்ஜெட் விவகாரத்தில் இருந்து விலகாதீர்கள். பட்ஜெட் மீது பேசுங்கள். நாங்கள் கவனிக்கிறோம். சீரியஸாக பதில் அளியுங்கள். தமாஷ் நடிகர் போல பேசாதீர்கள்’’ என்று கண்டித்தார்.

பாராளுமன்ற நடைமுறைக்கு ஒவ்வாத வார்த்தைகளை நிர்மலா சீதாராமன் பயன்படுத்துவதாகவும் காங்கிரஸ் சாடியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.