உத்தரபிரதேசத்தில் வாக்கு எந்திரங்கள் இருக்கும் அறையை காவல் காக்கும் சமாஜ்வாடி வேட்பாளர்கள்

லக்னோ:

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்ட சபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு கடந்த 10-ந்தேதி நடந்தது.

இதில் 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிக்கு தேர்தல் நடந்தது. முதல்கட்ட தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் முடிந்ததும் வாக்குகள் பதிவான எந்திரங்கள் வாக்குகள் எண்ணப்படும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்டன. அங்குள்ள அறைகளில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டு அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எந்திரங்கள் இருக்கும் அறைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் முசாபர் நகர் மாவட்டத்தில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு அருகே சமாஜ்வாடி கட்சியும் அதன் கூட்டணி கட்சியான ராஷ்டீரிய லோக்தளம் கட்சி வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பாதுகாப்புக்காக குவிந்துள்ளனர்.

முசாபர் நகர் மாவட்டத்தில் நடந்த தேர்தலில் பதிவான வாக்கு எந்திரங்கள் குட்மண்டி பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையிலும் வாக்கு எந்திரங்கள் இருக்கும் அறைகளுக்கு அருகே சமாஜ்வாடி-ராஷ்டீரிய லோக்தளம் கட்சிகளில் 6 வேட்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், தொண்டர்கள் பாதுகாப்புக்காக அங்கு முகாமிட்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, ‘வாக்கு எந்திரங்கள் அறைகளில் எப்போது வைக்கப்பட்டதோ அதில் இருந்து நாங்கள் பா.ஜனதா அரசை நம்பவில்லை. இங்கு நாங்கள் இரவு, பகலாக தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவோம்’ என்றனர்.

சமாஜ்வாடி கட்சியின் மாவட்ட தலைவர் பிரமோத் தியாகி கூறும்போது, ‘ஒரு சட்டசபை தொகுதிக்கு 4 பேர் வீதம் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். 6 தொகுதிகளில் இருந்தும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் எங்களது கண்காணிப்பு குழுவில் இணைவார்கள். இங்கு ஒவ்வொரு இரவும் மிகவும் முக்கியமானது’ என்றார்.

மேலும் நிர்வாகிகள் கூறும்போது, ‘உத்தரபிரதேச தேர்தலில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் விதிமுறைகள் மீறப்பட்டன. ஆகையால் இந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். வாக்குகள் எண்ணும் தேதி வரும் வரை நாங்கள் எங்கும் செல்லமாட்டோம்.

நாள் முழுவதும் வாக்கு எந்திரங்கள் இருக்கும் அறைகளை கண்காணிக்க கூடாரம் அமைக்க உள்ளோம். போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகம் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என்றனர்.

உத்தரபிரதேசத்தில் 7 கட்ட தேர்தல் முடிந்ததும் வாக்குகள் மார்ச் 10-ந்தேதி எண்ணப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.