ஐதராபாத்தில் 120 கிலோ தங்கத்திலான சிலை திறப்பு ஆழ்வார் முக்கியத்துவத்தை உலகிற்கு கொண்டு சென்றவர் ராமானுஜர்: குடியரசு தலைவர் பேச்சு

திருமலை: ஐதராபாத் முச்சிந்தலில் ரூ.1000 கோடியில் 216 அடி உயர ராமனுஜரின் சமத்துவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2ம் தேதி முதல் சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் லட்சுமி நாராயண ஹோமம் நடைபெற்று வருகிறது. இதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் பங்கேற்று உலக நன்மைக்காக யாகம், பூஜைகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று டெல்லியில் இருந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனவைியுடன் தனி விமானம் மூலம் ஐதராபாத்திற்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராம்நாத் கோவிந்த் முச்சிந்தலுக்கு சென்றார். அங்கு, அவரை பூரண கும்ப மரியாதையுடன் சின்ன ஜீயர் சுவாமி மற்றும் வேத பண்டிதர்கள் வரவேற்றனர். பின்னர், ராமானுஜரின் சிலையை அவர் தரிசித்தார். பின்னர், ராமானுஜர் நினைவாக அங்கு அமைக்கப்பட்டுள்ள கோயிலில் ராமானுஜரின் 120 கிலோ தங்க சிலையை அவர்  திறந்து வைத்து, 108 வைணவ திவ்ய தேச கோயில்களை பார்வையிட்டார். பின்னர் பேசிய ராம்நாத் கோவிந்த், ‘மகான் ராமானுஜரின் தங்க சிலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இது, எனது பாக்கியமாகும். ராமானுஜரின் போதனைகள்  சாஸ்திரங்களுக்கு மட்டுமே அடங்கி விடாமல், இந்தியர்களின் பக்திக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தென்னிந்தியாவில் ராமானுஜர் தொடங்கி வைத்த சமத்துவ போராட்டம் வட இந்தியாவிலும் பரவியது. ஆழ்வார்களின் முக்கியத்துவத்தை ராமானுஜர் உலகிற்கு கொண்டு சென்றார். மகாத்மா காந்தியும் ராமானுஜரை பின்பற்றி வாழ்ந்துள்ளார். கடவுளை வணங்க அனைவருக்கும் தகுதி உள்ளது,’ என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.