புதுச்சேரியின் 250 ஆண்டுகால ராஜ்நிவாஸில் சேதம்: வேறு இடம் மாறும் ஆளுநர் மாளிகை

புதுச்சேரி: 250 ஆண்டு பழமையான புதுச்சேரி ராஜ்நிவாஸ் கட்டுமானத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்புக்காக வேறு இடத்துக்கு விரைவில் மாறும் ஆளுநர் மாளிகை மாற்றப்பட உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியில் பிரெஞ்சு கட்டடக்கலையில் வடிவமைக்கப்பட்ட 250 ஆண்டு பழமையான ராஜ்நிவாஸ் கட்டுமானத்தில் கடும் சேதத்தினால் பொதுப்பணித்துறை பரிந்துரைப்படி பாதுகாப்புக்காக வேறு இடத்துக்கு ஆளுநர் மாளிகை விரைவில் மாறவுள்ளது. புதுச்சேரி பாரதி பூங்கா எதிரே கடற்கரையொட்டி ராஜ்நிவாஸ் அமைந்துள்ளது. கடந்த 1733ம் ஆண்டு 1764ம் ஆண்டு வரை ஹோட்டலொன்று இங்கு இருந்தது. ஆங்கில படையெடுப்பில் இவ்விடம் சேதமாக்கப்பட்டது. பின்னர் 1761ல் மீண்டும் கட்டுமானம் செய்யப்பட்டு, 1954ம் ஆண்டு வரை பிரெஞ்சு தலைமை கமிஷனர் அலுவலகமானது. புதுச்சேரி சுதந்திரம் அடைந்த பிறகு 1963ம் ஆண்டு முதல் துணைநிலை ஆளுநர் மாளிகையாக ராஜ்நிவாஸ் உள்ளது. ராஜ்நிவாஸில் ஆளுநர் தங்கும் அறைகள், அலுவலகம், ஆளுநர் செயலகம், அலுவலக ஊழியர்கள் குடியிருப்பு உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.

சுமார் 250 ஆண்டு பழமையான ராஜ்நிவாஸ் கட்டுமானம் தற்போது சேதம் அடைந்துள்ளது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை தரப்பில் விசாரித்தபோது, “ராஜ்நிவாஸ் முதல் தளத்தில் கட்டுமானம் சேதம் அடைந்துள்ளது. காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுகின்றன. மழை நீரில் தண்ணீர் ஒழுகுவதும் நடக்கிறது. கட்டட உறுதி தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆளுநர் மாளிகையை விரைவில் வேறு இடத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்று அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டனர்.

இது பற்றி ஆளுநர் மாளிகை வட்டாரங்களில் விசாரித்தபோது, “ராஜ்நிவாஸிலிருந்து மாறி வேறு இடத்தில் தங்க ஆளுநர் முடிவு எடுத்துள்ளார். குறிப்பாக கடற்கரைச்சாலையில் கட்டப்பட்டுள்ள நீதிபதிகள் தங்கும் குடியிருப்பில் ஆளுநர் தங்குவார். ஆளுநரின் அலுவலகம், ஆளுநர் செயலகம் ஆகியவை கடற்கரை சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேரி நகராட்சி கட்டடத்தில் செயல்படும். இரு கட்டடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆளுநருக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விரைவில் ஆளுநர் புதிய இடத்துக்கு மாறுவார்” என்று குறிப்பிட்டனர்.

பழமையான ராஜ்நிவாஸை அரசு எவ்வகையில் புதுப்பிக்கப்போகிறது என்று விசாரித்தபோது, “ராஜ்நிவாஸ் 250 ஆண்டுகளை கடந்து கட்டுமானம் சேதம் அடைந்துள்ளதால் பழமை மாறாமல் புதுப்பிப்பதா அல்லது இடித்து கட்டுவதா என்பது பற்றி ஐஐடி கட்டடக்கலை நிபுணர் குழு மூலம் அறிக்கை பெறப்பட்டு முடிவு எடுக்கப்படும்” என்று குறிப்பிடுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.