காதலர்கள் போல் தனியாக சென்று வாக்கு சேகரியுங்கள் – வேட்பாளர்களுக்கு ஐடியா கொடுத்த அமைச்சர் துரைமுருகன்

குடியாத்தம்:
குடியாத்தத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அகில இந்திய தலைவராக உருவாகி வருகிறார். தமிழ்நாட்டில் வரும் 25 ஆண்டுகள் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி இருக்கும். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் 6 மாதங்கள் கொரோனா பாதிப்பு இருந்தது.
அதில் மீண்ட உடன் பெருவெள்ளம் இப்படியே 8 மாதம் கழிந்து விட்டது.
6 மாத பட்ஜெட் தான் போட்டுள்ளோம், இனி வரும் நாளில் முழு ஆண்டு பட்ஜெட் போட்ட பிறகு சிறப்பாக இருக்கும்.
இந்த ஆட்சியின் பலன்கள் குடியாத்தம் மக்களுக்கு சென்றடைய நகராட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் அனைவரும் அயராது உழைத்து வெற்றி பெறவேண்டும். ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் நகரமன்ற தலைவர் யார் என்பதை கட்சியின் தலைவர் முடிவு செய்வார்.
ஆளும் கட்சியாக தி.மு.க. இருக்கும்போது தி.மு.க. உறுப்பினர்கள் வெற்றிபெற்று குடியாத்தம் நகர மன்றத்தை கைப்பற்றினால் தான் தலை நிமிர்ந்து நடக்க முடியும்.
ஓட்டு சேகரிப்பின் போது கும்பலாக சென்று ஓட்டு கேட்டால் அவர்கள் ஓட்டு போடுகிறேன் என்று தான் சொல்வார்கள். இல்லையென்றால் தலையை மட்டும் ஆட்டுவார்கள்.
அப்படி கும்பலாக செல்லாமல் காதலர்கள் போல் தனித்தனியாக சென்று வாக்காளர்களை சந்தியுங்கள் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.