`டெட்’ தேர்வுடன் `நீட்’ தேர்வை அண்ணாமலை ஒப்பிடுவது சரியா?! – ஓர் அலசல்

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற விவகாரத்தில், தமிழக தி.மு.க அரசுக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவருகிறது. இந்த நிலையில், மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வையும், ஆசிரியர் பணியில் சேருவதற்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் ‘டெட்’ தேர்வையும் ஒப்பிட்டு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

டெட் தேர்வு

“ஆசிரியர் பணிக்கு பி.எட் தேர்வு மதிப்பெண் இருந்தும், ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துகிறார்கள். மேலும், ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தகுதித் தேர்வை நடத்துகிறார்கள். நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது என்று எதிர்ப்புத் தெரிவிக்கும் தி.மு.க., இரண்டு டெட் தேர்வுகளை நடத்துவது எந்த விதத்தில் நியாயம்?” என்று கேட்டிருக்கிறார் அண்ணாமலை.

மேலும், “2017-ல் டெட் தேர்வெழுதி ஆசிரியர் பணிக்குத் தேர்வு பெற்றவர்கள் பணி நியமன ஆணைக்கு காத்துக்கொண்டிருந்த நேரத்தில், அவர்களுக்கு மீண்டும் ஒரு தகுதித்தேர்வு எழுத உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது எதிர்க் கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், டெட் தேர்வில் தேர்வான அனைவருக்கும் உடனடியாக பணி நியமன ஆணையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அண்ணாமலை

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2017-ல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் வேலை தரப்படும் என்று கிராம சபைக் கூட்டங்களில் ஸ்டாலின் உறுதியளித்தார். எனவே, தி.மு.க தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, அரசாணை 149-ஐ நீக்குவதற்கான வாக்குறுதியை தி.மு.க அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.

நீட் தேர்வையும் டெட் தேர்வையும் ஒப்பிடுவது சரியா என்ற கேள்வியை பா.ஜ.க-வின் மாநில செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் முன்வைத்தோம்.

“தமிழக அரசின் நீட் எதிர்ப்புக்கு எதிர்வினையாகத்தான் டெட் தேர்வு தொடர்பான கேள்வியை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்வைக்கிறார். ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு தரம் வாய்ந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக, தகுதித் தேர்வு மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

நாராயணன்

ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுப்பதற்கான ஆசிரியர்களையே, தகுதித் தேர்வு நடத்தி, அதுவும் இரண்டு முறை தகுதித் தேர்வுகளை நடத்தித் தேர்வுசெய்யும்போது, உயிரைக் காக்கும் மருத்துவம் படிப்பதற்கு தகுதித் தேர்வு தேவையில்லை என்று சொன்னால் எப்படி? இதைத்தான் தி.மு.க அரசுக்கு கேள்வியாக அண்ணாமலை முன்வைக்கிறார்.

மேலும், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் 2017-ல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் பணி தரப்படும் என்று ஸ்டாலின் உறுதியளித்தார். அந்த வாக்குறுதி என்னவானது? இதற்கு தி.மு.க அரசு பதில் சொல்ல வேண்டும்” என்கிறார் நாராயணன் திருப்பதி.

நீட் தேர்வையும் டெட் தேர்வையும் ஒப்பிடுவது குறித்து கல்வியாளர் ரத்தினசபாபதியிடம் கேட்டோம்.

“குரூப் 1, குரூப் 2 என பல தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி நடத்துகிறது. குரூப் 1 தேர்வு எழுவதற்கு குறைந்தப்பட்சத் தகுதியாக இளங்கலைப் பட்டம் வைக்கப்பட்டிருக்கிறது. அதற்காக, இளங்கலைப் பட்டம் பெற்றவர்களையெல்லாம் அப்படியே வேலைக்கு எடுத்துவிட முடியாது. இளங்கலை முடித்தவர்கள் ஏராளமானோர் இருப்பார்கள். எனவே, போட்டித்தேர்வு நடத்தி அரசுப் பணிகளுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்கிறார்கள். நீட் தேர்வு என்பது வேலைக்கான தேர்வு அல்ல. அது படிப்புக்கான தேர்வு.

ரத்தினசபாபதி

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கு இடங்களை ஒதுக்கீடு செய்வதுதான் சரியான நடைமுறை. கிராமப்புறம் மற்றும் அடித்தட்டு வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே படிக்கிறார்கள். அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, மீண்டும் இன்னொரு தேர்வை எழுதச் சொல்வது மிகவும் தவறானது. நீட் தேர்வு கூடாது என்பதற்கு ஏராளமான காரணங்களைச் சொல்ல முடியும்.

மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வை அனுமதித்துவிட்டால், பிறகு 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு ஆகியவற்றுக்கு ‘எக்ஸிட்’ தேர்வு கொண்டுவந்துவிடுவார்கள். ஒரு மாணவர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டால், அவரால் 11-ம் வகுப்புக்கு போக முடியாது. ‘எக்ஸிட்’ தேர்வு எழுதித்தான் அவரால் 11-ம் வகுப்பில் சேர முடியும் என்ற நிலை வந்துவிடும்.

ஸ்டாலின்

இன்னொரு முக்கியமான விஷயம் ‘சோசியலைசேஷன்’. தமிழில் சமூகமயமாதல். பள்ளிக்கூடம் என்பது நம் சமூகத்தின் ஒரு சிற்றுரு (மினியேச்சர்). பள்ளிக்கூடத்தின் மூலமாகத்தான் சமூகமயமாதல் வருகிறது. அப்படியிருக்கும்போது, நீட் தேர்வு வந்துவிட்டால், பள்ளிக்கூடம் என்பது ஒரு கோச்சிங் சென்டர் மாதிரியோ, டுடோரியல் மாதிரியோ ஆகிவிடும்.

மருத்துவத்துக்கு மட்டுமல்லாமல் பொறியியல், வேளாண்மை உள்பட அனைத்துப் படிப்புகளுக்கும் நீட் மாதிரியான தேர்வை கொண்டுவந்துவிடுவார்கள். அதனால், சமூகமயமாதல் என்பது அடிபட்டுவிடும். எந்திரங்களைப் போலத்தான் மாணவர்கள் வெளியே வருவார்கள். அவர்களுக்கு சமுதாய உணர்வு இருக்காது. அப்படிப்பட்ட ஒரு தேர்வுடன் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஒப்பிடுகிறார்.

Also Read: கொரோனா தடுப்பூசிக்கு எதிராக கனடா, நியூஸிலாந்து, ரஷ்ய மக்கள்…. என்ன நடக்கிறது?!

`நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது என்று எதிர்ப்புத் தெரிவிக்கும் தி.மு.க., இரண்டு டெட் தேர்வுகளை நடத்துவது எந்த விதத்தில் நியாயம்?’ என்று அண்ணாமலை கேட்கிறார். அந்த டெட் தேர்வைக் கொண்டுவந்ததும் மத்திய அரசுதானே. முன்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர் தேர்வு நடைபெற்றது. டெட் தேர்வு கொண்டுவரப்பட்ட பிறகு, அந்த நிலைமை மாறிவிட்டது. அதற்கு மத்திய அரசுதானே காரணம்.

அண்ணாமலை

டெட் தேர்வு கொண்டுவரப்பட்டபோது, தமிழகத்தில் அ.தி.மு.க அரசு இருந்தது. அந்த நேரத்தில் டெட் தேர்வை யாரும் கவனிக்கவில்லை. அது பற்றிய விழிப்புணர்வு தமிழக அரசியல் கட்சிகளிடமோ, பொதுமக்களிடமோ இல்லை. அப்போது டெட் தேர்வை நான் எதிர்த்தேன். ‘தகுதியில்லாத தகுதித் தேர்வு’ என்ற தலைப்பில் ஒரு பெரிய கட்டுரையையே ஒரு நாளேட்டில் எழுதினேன். அந்தத் தேர்வை மாநிலங்கள் மீது திணித்தது மத்திய அரசுதான்” என்கிறார் ரத்தின சபாபதி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.