லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் பயப்படவில்லை: ஜஸ்டின் ட்ரூடோ

ஒட்டா: “லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் பயப்படவில்லை” என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் ஜஸ்டின் ட்ரூடோ பேசும்போது, “இந்த கரோனா காலம் அனைவரையும் வெறுப்படைய செய்துள்ளது. நாம் இன்னமும் கரோனாவுக்கு எதிரான போரில் வெல்லவில்லை. ஆனால், கடந்த சில நாட்களாக நாட்டின் தலைநகரில் போராட்டம் நடத்தும் சிலரின் நடவடிக்கையால் நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் கனடா பயப்படவில்லை. இந்த நடத்தைக்கு கனடாவில் இடமில்லை. நான் மிகவும் தெளிவாக இருக்க விரும்புகிறேன். சிறு வணிகத் தொழிலாளர்கள் மீது துஷ்பிரயோகம் செய்பவர்கள் மற்றும் வீடற்றவர்களிடமிருந்து உணவைத் திருடுபவர்களை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம். இனவாதக் கொடிகளைப் பறக்க விடுபவர்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம். எங்கள் படைவீரர்களின் நினைவிடத்தை அவமதிப்பவர்களுக்கு அடிபணிய மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

என்ன நடக்கிறது கனாடாவில்..?

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து, கனடாவில் அதன் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அந்நாட்டு அரசு கரோனா கட்டுப் பாடுகளை கடுமையாக்கியுள்ளது. பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனால், மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு போராட்டங்கள் நடக்கின்றன. அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லாரி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்களை ஒரு வாரம் தனிமைப்படுவர் என்றும் அரசு உத்தரவிட்டது.

இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ள லாரி ஓட்டுநர்கள், தலைநகர் ஒட்டாவாவுக்குள் லாரிகளுடன் நுழைந்து போராடப் போவதாக அறிவித்தனர். அதன்படி, சனிக்கிழமையன்று ஒட்டாவாவுக்குள் ஏராளமான லாரிகள் நுழைந்தன. போலீஸார் கணிப்பைவிட அதிக வாகனங்களும் போராட்டக்காரர்களும் வந்ததால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக, அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனையின் பேரில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்துடன் ரகசிய இடத்துக்குச் சென்றார். தலைநகரில் போலீஸார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைநகரில் நுழைந்த போராட்டக்காரர்கள் போர் நினைவகம், அருங்காட்சியம் ஆகிய இடங்களில் நுழைந்தனர். போர் நினைவகத்தில் சிலர் நடனமாடினர். இதற்கு கனடா ராணுவ அமைச்சர் அனிதா ஆனந்த், ராணுவ தளபதி வைனே ஐர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.