என்னை கொல்ல தி.மு.க.வினர் சதி- சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

திண்டிவனம்:

திண்டிவனம் நகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காந்தி சிலை அருகே இன்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

கடந்த 2006-ம் ஆண்டு என் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈடுபட்டதாக கூறப்படுபவர், தான் இருந்த கட்சியில் இருந்து மாறி தற்போது தி.மு.க.வில் இணைந்து தனது மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளார்.

எனக்கு தரப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. எனவே என்னை கொல்ல மீண்டும் சதி நடைபெறுகிறதோ என்று நினைக்கிறேன். இந்த தேர்தலை பொறுத்தவரை ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வரை தரப்படுகிறது.

தி.மு.க.வின் ஏவல்துறையாக செயல்படும் காவல்துறையினர் காக்கிச்சட்டையை கழற்றிவைத்துவிட்டு அந்த கட்சிக்காக பணம் விநியோகம் செய்து வருகின்றனர். இதற்கு தேர்தல் கமி‌ஷனும் உடந்தையாக உள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து உள்ளாட்சியில் நல்லாட்சி மலர ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.