மந்திரி ஈஸ்வரப்பாவை நீக்க வலியுறுத்தி சட்டசபையில் காங்கிரசார் தொடர் போராட்டம்

பெங்களூர்:
கர்நாடகத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவை மீறி உடுப்பி, சிவமொக்கா, துமகூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். இதனால் இந்து மாணவர்களும் காவி துண்டு போட்டு வகுப்புக்கு வந்தனர். இதனால் கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவியது. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.
அன்றைய தினம் கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈஸ்வரப்பா, டெல்லி செங்கோட்டையில் காவிக்கொடி ஏற்றும் நாள் வரும் என்று கூறினார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இதன்மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மந்திரி ஈஸ்வரப்பாவை பதவிநீக்கம் செய்யவேண்டும் என வற்புறுத்தினார். இதை ஏற்க அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் தேசிய கொடியுடன் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா நடத்தினர். மந்திரி ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து சபை முடங்கியது. சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், சட்டசபையில் நேற்று இரவும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடிய, விடிய காங்கிரசார் போராட்டம் நடத்தினர். அவர்கள் அங்கேயே படுத்துத் தூங்கினர். அவர்களுக்கு தேவையான உணவு, தேநீர், காபி உள்ளிட்டவை ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது. இதன்மூலம் ஈஸ்வரப்பா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.