போக்சோ குழந்தைகளை காக்கவே தவிர, காதலிக்கும் இளைஞர்களுக்கு அல்ல! – அலகாபாத் உயர்நீதிமன்றம்

போக்சோ சட்டம் என்பது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு உருவாக்கப்பட்டதே தவிர, ஒருவரைக்கொருவர் காதலிக்கும் இளைஞர்களுக்கானது அல்ல என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், 14 வயது சிறுமியை, சிறுவன் ஒருவன் காதலித்துள்ளான். இவர்களில் சிறுவன் உயர் வகுப்பைச் சேர்ந்தவராகவும், சிறுமி பட்டியலினத்தை சேர்ந்தவராகவும் இருந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு பெற்றோரிடம் இருந்து எதிர்ப்பு வரவே, இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி, கோயிலில் திருமணம் செய்து கொண்டு, 2 ஆண்டுகள் குடும்பம் நடத்தியுள்ளனர். இந்த சமயத்தில் இவர்களுக்கு, ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. திருமணத்தின்போது சிறுவனாக இருந்தநிலையில், தற்போது அவர் இளைஞராகியுள்ளார்.
இந்நிலையில், சிறுமியை திருமணம் செய்ததாக, அந்த இளைஞருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், இளைஞருக்கு ஜாமீன் வழங்கக் கோரி அளிக்கப்பட்ட மனுவை, நீதிபதி ராகுல் சதுர்வேதி விசாரணை செய்தார். அதில், காதலிக்கும் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சட்டத்தின் உள்பொருளை புரிந்து கொள்ளாமல், அதிலிருக்கும் தண்டனைப் பிரிவை மட்டும் அடிப்படையாக வைத்து, வழக்குகள் பதிவு செய்யப்படுவது வருத்தத்தை அளிக்கிறது என்று மனவேதனையுடன் கூறியுள்ளார்.
image
மேலும், “பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல், ஆபாசப் படங்களை காண்பித்தல் போன்ற குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவே, போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், ஒருவொருக்கொருவர் காதல் செய்யும் சிறார்கள், இளைஞர்களுக்கு எதிராக, குடும்பத்தினர் கொடுக்கும் புகார்கள் எல்லாமே, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. காதலிப்பது என்பது இயற்கையான நிகழ்வு. அந்த நிகழ்வை, இந்த சட்டத்திற்குள் கொண்டுவரவேண்டியதில்லை என்பதை, போக்சோ சட்டம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், போக்சோ வழக்கில் ஜாமீன் கோரிய இளைஞருக்கு, நீதிபதி ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.