12-18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கார்பிவேக்ஸ் தடுப்பூசி செலுத்த அனுமதி

புதுடெல்லி: 
ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம் தயாரித்துள்ள ‘கார்பிவேக்ஸ்’ என்ற கொரோனா தடுப்பூசியை பெரியவர்களுக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் நாட்டின் தடுப்பூசி இயக்கத்தில் இது சேர்க்கப்படவில்லை. இது புரோட்டின் ஆன்டிஜென் முறையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பூசி ஆகும். தடுப்பூசியின் செயல் திறன் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
அதன்  ஒரு பகுதியாக கார்பிவேக்ஸ் தடுப்பூசியை 5 முதல் 18 வயது வரை உள்ள சிறார்கள் மற்றும் இளம் பருவத்தினருக்கு செலுத்தி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளுடன், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம் (டிசிஜிஐ) விண்ணப்பிக்கப்பட்டது. இதையடுத்து மருந்தின் செயல்திறன் குறித்து வல்லுநர் குழு ஆய்வு செய்து, மருந்தை 12 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்கலாம் என பரிந்துரை செய்தது. 
இதனையடுத்து, கார்பிவேக்ஸ் தடுப்பூசியை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 12 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு அவசர கால பயன்பாட்டிற்கு டிசிஜிஐ அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. 
தடுப்பூசிக்கான கூடுதல் தேவை மற்றும் தடுப்பூசி செலுத்த அனுமதிப்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படுவதாக சுகாதார அமைச்சகம் சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.
கார்பிவேக்ஸ் தடுப்பூசியானது 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட வேண்டும். 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்கப்பட்டு, ஒரு டோசுக்கு 0.5 மில்லி செலுத்த வேண்டும். இந்த மருந்து 5 மில்லி (10 டோஸ்கள்) கொண்ட குப்பியாக வழங்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.