தமிழ் சினிமா இயல்பு நிலைக்கு மாறத் தொடங்கிவிட்டது. கடந்தாண்டு கொரோனா மூன்றாவது அலை பரவலினால், தியேட்டர்கள் மூடல், அதன்பின் ஐம்பது சதவிகித இருக்கைக்கு அனுமதி போன்ற சூழல்களினால் அப்போது வெளியாக வேண்டிய டாப் ஹீரோக்களின் படங்களைத் தள்ளி வைத்தனர். இடையே சின்ன பட்ஜெட் படங்கள் கொத்துக் கொத்தாக வெளியானாலும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. முதல் லாக்டௌனுக்குப் பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ படத்தை எதிர்பார்த்தது போல… மூன்றாவது அலைக்கு பிறகு ‘வலிமை’யை எதிர்பார்த்தனர்.
இனி வரும் நாள்களில் ராஜமௌலி, கமல், விஜய், சிவகார்த்திகேயன், விக்ரம், தனுஷ், பிரபாஸ் உள்பட பலரின் படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. அந்தப் படங்களின் பட்டியல் இதோ!

வரும் மார்ச் 10ம் தேதி சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸாகிறது. சூர்யாவின் ‘சூரரை போற்று’, ‘ஜெய் பீம்’ போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாகின. எனவே நீண்ட இடைவெளிக்கு பின் சூர்யாவின் படம் தியேட்டரில் வருகிறது. பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்த ‘ராதே ஷ்யாம்’ மார்ச் 11ம் தேதி வெளியாகிறது. தனுஷ், மாளவிகா மோகனன் நடித்த ‘மாறன்’ படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் 11ம் தேதி வெளியாகிறது. லைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் ‘டான்’ மார்ச் 25ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடித்த ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை லைகா அன்று வெளியிடுவதால், ‘டான்’ படத்தின் ரிலீஸை மே மாதம் 13ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறது.
வெங்கட் பிரபுவின் ‘மன்மதலீலை’ மற்றும் ராம்பாலாவின் ‘இடியட்’ ஆகிய இரண்டும் ஏப்ரல் 1-ம் தேதி ரிலீஸாகின்றன. சென்ற வருடமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘கே.ஜி.எஃப்’ 2′ ஏப்ரல் 14 அன்று வெளியாகிறது. அன்றுதான் விஜய்யின் ‘பீஸ்ட்’டும் ரிலீஸ். விக்ரமின் ‘கோப்ரா’ வெளியிட்டை மே 26க்கு தள்ளிவைத்துள்ளனர். கமலின் ‘விக்ரம்’ படம் ஏப்ரல் 28 அன்று வெளியாகலாம் என்கிறார்கள். அன்றுதான் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தாவின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ வெளிவரவிருக்கிறது. சென்ற மாதமே காதலர் தின ஸ்பெஷலாக ஓடிடியில் ‘கா.வா.ரெ.கா’ ரிலீஸ் ஆகலாம் என பேச்சிருந்தது. ஆனால், இயக்குநர் விக்னேஷ் சிவன் தியேட்டர் ரிலீஸில் உறுதியாக இருந்ததால் படம் அடுத்த மாதம் வருகிறது.

மலையாளத்தின் ‘பீஷ்ம பர்வம்’, ‘நாரதன்’, தமிழில் ‘ஹே சினாமிகா’ படங்கள் இன்று வெளியாகி உள்ளன. தெலுங்கில் ‘ஆடவல்லுமீக்கு ஜோஹர்லு’, ‘செபாஸ்டியன் பிசி524’ மற்றும் இந்தி ‘ஜூந்த்’, டிசி காமிக்ஸின் சூப்பர்ஹீரோ படமான ‘தி பேட்மேன்’ ஆகியவை நாளை வெளியாகிறது. ‘தி பேட்மேன்’ படத்தின் ஐமேக்ஸ் சிறப்புக் காட்சிகள் மட்டும் இன்றிலிருந்தே தொடங்கிவிட்டன.
ஆக மொத்தத்தில், இனி திரையரங்கங்களில் திருவிழாதான். இதில் நீங்கள் எந்தப் படத்துக்காக வெயிட்டிங்? கமென்ட்டில் சொல்லுங்கள்.