டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப்.. காங்கிரஸுக்கு மாற்றாக உருவெடுக்கிறதா ஆம் ஆத்மி?

இந்தியாவைப் பொறுத்தவரை
காங்கிரஸ்
, பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் அரசுகள்தான் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களை ஆட்சி செய்துள்ளன. தற்போது இவற்றுக்கு அடுத்த இடத்தை
ஆம் ஆத்மி
பிடிக்கவுள்ளது. இது இந்திய அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

எளிய மக்களின் தலைவராக அடையாளம் காட்டப்பட்டு உருவாக்கப்பட்டவர்தான் அரவிந்த் கெஜ்ரிவால். அவர் ஏற்படுத்திய அலை இந்தியா முழுவதும் பரவியது. ஆனால் அந்த அலைக்கு அங்கீகாரம் கிடைத்தது டெல்லியில்தான். ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியைப் பிடித்தபோது புதிய வரலாற்றையும் சேர்த்தே படைத்தது. இப்போது இன்னொரு வரலாறுக்கு அது தயாராகி வருகிறது.

இதுவரை இந்தியாவில் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்டுகளைத் தவிர வேறு எந்தக் கட்சியும் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சி புரிந்ததில்லை. இந்த வரலாறு இதுவரை காங்கிரஸ், பாஜகவுக்கு மட்டுமே சொந்தமாக உள்ளது. ஆனால் தற்போது அந்த வரிசையில் ஆம் ஆத்மியும் இணையவுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கும் என அனைத்து
எக்ஸிட் போல்
சர்வேக்களும் சொல்லியுள்ளன. சாதாரண வெற்றி முதல் மிகப் பெரிய வெற்றி வரை அனைவரும் கணித்துள்ளனர்.

இது நடந்தால் நிச்சயம் ஆம் ஆத்மியின் வரலாற்றில் இது முக்கியமான சம்பவமாக இருக்கும். கூடவே சில கேள்விகளையும் ஆம் ஆத்மியின் வளர்ச்சி எழுப்புகிறது. காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி முளை விட ஆரம்பித்திருக்கிறதா என்பது முதல் கேள்வி.

டெல்லியில் காங்கிரஸை காலி செய்து விட்டுத்தான் ஆட்சியமைத்தது ஆம் ஆத்மி. இப்போது பஞ்சாபிலும் காங்கிரஸ் ஆட்சியை அகற்றி விட்டுத்தான் ஆம் ஆத்மி ஆட்சி அமையவுள்ளது. இதனால் காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மி வளர ஆரம்பித்துள்ளதா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

கோவாவிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு 5 இடங்கள் வரை கிடைக்கலாம் என சில கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன. அதையும் புறக்கணித்து விட முடியாது. சின்னச் சின்ன மாநிலங்களாக குறி வைத்து கெஜ்ரிவால் காய் நகர்த்தி வருகிறார். குறிப்பாக வட இந்தியாவில் மெல்ல மெல்ல ஆம் ஆத்மி புதிய சக்தியாக உருவெடுக்க ஆரம்பித்துள்ளது. மேலும் தன்னால் முடிந்த இடங்களில் எல்லாம் தனது முத்திரையை அது பதிக்க ஆரம்பித்திருக்கிறது. இதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் அரசு மீது மக்கள் மிகப் பெரிய அதிருப்தியில் இருந்தனர். இதற்கு முக்கியக் காரணம், முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் நிர்வாக முறை தான். அவரது நிர்வாகம் மீது அதிருப்தியடைந்த மக்கள் மாற்று சக்தியாக பாஜகவைப் பார்க்கவில்லை. மாறாக ஆம் ஆத்மியைப் பார்த்தனர். இதன் விளைவுதான் மிகப் பெரிய வெற்றியை நோக்கி ஆம் ஆத்மி இப்போது பாயத் தொடங்கியுள்ளது.

இதேபோல பிற மாநிலங்களிலும் நடக்க ஆரம்பித்தால் காங்கிரஸ் கட்சியின் கதி அதோ கதிதான். நாளை காங்கிரஸ் மேலும் பலவீனமடைந்து பாஜக மீதும் மக்கள் அதிருப்தி அதிகரித்தால், நிச்சயம் மாற்று சக்தியாக ஆம் ஆத்மிதான் மக்கள் மனதில் வந்து நிற்கும் நிலை உருவாகி வருகிறது. இது இந்திய அரசியலில் பல புதிய வரலாறுகளைப் படைப்பதற்கான அடிப்படையாக அமையக் கூடும்.

ஆம் ஆத்மி உருவானபோதே அது காங்கிரஸுக்கு எதிரான கட்சியாகத்தான் பெரும்பாலானோரால் பார்க்கப்பட்டது. இந்தக் கட்சியால் பாஜகவுக்கு எந்தப் பாதகமும் இல்லை என்றும் கணிக்கப்பட்டது. இப்போது அது போலத்தான் ஆம் ஆத்மியின் வளர்ச்சியும் இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் ஆட்சிகளைத்தான் அது படிப்படியாக காலி செய்து கொண்டு வருகிறது. அடுத்து எந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வலுப்பெறும் என்பது சுவாரஸ்யமான எதிர்பார்ப்பாக உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு பாஜக மட்டும் எதிரி இல்லை.. ஆம் ஆத்மியும் மிக வலுவான எதிரியாக மாறி வருகிறது. சுதாரித்துக் கொண்டால் “கை” தப்பும்.. இல்லாவிட்டால் கஷ்டம்தான்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.