எல்லை தாண்டி விழுந்த ஏவுகணை அத்துமீறல் என பாக்., கண்டனம்| Dinamalar

இஸ்லாமாபாத்:அதிவேக மர்ம பொருள் ஒன்று, இந்திய பகுதியில் இருந்து பறந்து சென்று, பாகிஸ்தானுக்குள் விழுந்து நொறுங்கியசம்பவம் தொடர்பாக, பாகிஸ்தானுக்கான இந்திய துாதரை நேரில் அழைத்து, அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்து உள்ளது.

மர்ம பொருள்

இது குறித்து, பாக்., வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை: ராஜஸ்தானின் சூரத்கர் பகுதியில் இருந்து அதிவேகமாக பறந்த மர்ம பொருள் ஒன்று, பாக்., வான்வெளிக்குள் கடந்த 9ம் தேதி மாலை 6:43 மணிக்கு நுழைந்தது. 40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து வந்த அந்த மர்ம பொருள், 3 நிமிடம், 44 வினாடிகளில் 124 கி.மீ., துாரத்தை அதிவேகமாக கடந்து, பாக்.,கின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான் சுன்னு என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது.

இது ஏவுகணையா அல்லது வேறு ஏதேனும் பறக்கும் பொருளா என்பது தெரியவில்லை. இதில், பொது மக்கள் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது; உயிர் பலியோ, காயமோ ஏற்படவில்லை. இந்திய தரப்பின் இந்த அத்துமீறிய செயலால், பாக்., வான்வெளியில் பறக்கும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணியர் விமானங்கள் மிகப் பெரிய விபத்தை சந்தித்திருக்கக்கூடும்.

பாகிஸ்தானுக்கான இந்திய துாதரை நேரில் அழைத்து, இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.மேலும், இந்த பறக்கும் மர்ம பொருள் குறித்து தீவிர விசாரணை நடத்தி, அதில் கிடைக்கும் தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்திய அரசை அறிவுறுத்துமாறு, துாதரிடம் வலியுறுத்தப்பட்டது.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய அரசின் பதிலை பெற்ற பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். ‘ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள நாடுகளின் துாதர்களை அழைத்து இந்த சம்பவம் குறித்து விவரிக்கப்படும்’ என்றார்.


பராமரிப்பு பணி

இந்த சம்பவம் தொடர்பாக, நம் ராணுவ அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதன் விபரம்: வழக்கமான பராமரிப்பு பணிகளின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, எதிர்பாராத விதமாக வெளியேறிய ஏவுகணை, பாக்., பகுதிக்குள் விழுந்துள்ளது. இது உண்மையில் வருத்தத்துக்கு உரியது. இந்த தவறு எப்படி நேர்ந்தது என்பது குறித்து ஆராய, உயர்மட்ட விசாரணைக்கு ராணுவம் உத்தரவிட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.