கொரோனா இழப்பீடுக்கு போலி சான்றிதழ் மனித ஒழுக்கம் இவ்வளவு தரம் தாழ்ந்து போகுமா? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி

புதுடெல்லி: கொரோனா 2வது அலையால் ஏராளமானோர் பலியாயினர். கொரோனா மரணங்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநிலங்களின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் இழப்பீட்டுத்தொகை வழங்க உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசு மற்றும் குஜராத் அரசு தரப்பில் ஆஜரான சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,‘‘ கொரோனா இழப்பீட்டு தொகையைப் பெறக்கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களும் அதிகரித்துள்ளது. அதே போல் போலி சான்றிதழ்களும் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில அதிகாரிகள் போலி சான்றிதழ் தயாரிக்க உடந்தையாக இருக்கிறார்கள்’’ என்றார். இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ‘‘தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கும், அனாதை குழந்தைகளுக்கும்  வாழ்வாதாரத்தை வழங்குவதற்காக அளிக்கப்படும் உதவிகளை போலியாக பெறும் அளவுக்கு சமுதாயத்தில் ஒழுக்கம் தரம் தாழ்ந்து போகும் என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்த தலைமை கணக்கு தணிக்கையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.