திருப்பதியில் 2 ஆண்டுக்கு பிறகு தெப்ப உற்சவம்- லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இரவு தெப்பல் உற்சவம் நடந்தது.

திருப்பதியில் ஆண்டு தோறும் 5 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறும்.கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தெப்ப உற்சவம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் தெப்ப உற்சவத்தை விமரிசையாக நடத்த தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி முதல் நாள் தெப்ப உற்சவம் நேற்று இரவு தொடங்கியது. வரும் 17-ந் தேதி வரை 5 நாட்கள் தெப்ப உற்சவம் நடக்கிறது. தெப்பல் உற்சவம் தொடங்கியதையொட்டி ஏழுமலையான் கோவிலில் தினசரி நடைபெறும் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் 5 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

முதல் நாளான நேற்று இரவு ஸ்ரீ சீதா, ராமர், லக்ஷ்மணர் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்ட தீர்த்தவாரி குளத்தில் மின் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உலா வந்தனர். 3 சுற்றுகள் வலம் வந்தனர். தெப்பல் உற்சவத்தில் வேதம், பாட்டு, நாதம் ஆகியவற்றுக்கு இடையே தெப்பல் உற்சவம் நடந்தது.

2 ஆண்டுக்கு பிறகு தெப்ப உற்சவ தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்தனர்.

புஷ்கரணி முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலம் திருப்பதியில் இருந்து திருமலைக்கு வந்தனர்.

இதனால் அலிபிரி சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருப்பதியில் நேற்று 74,167 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 33,976 பேர் முடி காணிக்கை செலுத்தினர் ரூ.4.50 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.