மாயாவதிக்கு நேர்ந்த கதி.. அகிலேஷ் பாடம் கத்துக்கணும்.. இதைப் படிங்க!

மாயாவதிக்கு நேர்ந்த கதியைப் பார்த்து
அகிலேஷ் யாதவ்
பாடம் கற்றுக் கொள்ளாவிட்டால் இன்று மாயாவதிக்கு நேர்ந்தது நாளை அகிலேஷுக்கும் நடக்கும் என்று ஊடகவியலாளர் சிவம் விஜ் எச்சரித்துள்ளார்.

உத்தரப் பிரதேச அரசியல் மிக மிக வினோதமானதாக இருக்கிறது. நேரு பிறந்த பூமி.. இந்திரா காந்தி கோலோச்சிய மாநிலம்.. ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என்று வரிசையாக காந்தி குடும்பத்தினர் கட்டி ஆண்ட நிலப்பரப்பு.. இந்தியாவின் மிகப் பெரிய மாநிலம்.. என்ற பெருமைகளுடன் பற்பல ஆண்டுகள் காங்கிரஸ் வசம் இருந்த மாநிலம் அது.

ஆனால் இன்று ஒரு சீட்டில் ஜெயிக்கவே காங்கிரஸ் தண்ணீர் குடிக்க வேண்டியுள்ளது. இந்த தேர்தலில் உ.பியில் காங்கிரஸுக்கு மக்கள் கொடுத்த சீட் ஜஸ்ட் 2 மட்டுமே. எத்தனை கொடூரமானது பாருங்கள்.. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் சோனியா காந்தி இங்கு போட்டியிட்டால் ஜெயிப்பது கூட சந்தேகம்தான். அந்த அளவுக்கு மோசமாகி விட்டது காங்கிரஸ் நிலைமை.

கிட்டத்தட்ட காங்கிரஸுக்கு ஏற்பட்ட அதே கதிதான் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனானப்பட்ட முலாயம் சிங் யாதவ், காங்கிரஸ், பாஜக என தான் அடித்த எல்லோருமே “டான்” என்று சொல்லக் கூடிய அளவுக்கு அதிரடி ராணியாக வலம் வந்தவர்
மாயாவதி
. அவரது மேஜிக்கைப் பார்த்து பெரும் பெரும் தலைகளே பயந்தன, மிரண்டன. ஆனால் இன்று “சிங்கிள் சீட் தலைவி”யாக மாறியிருக்கிறார் மாயாவதி.

இதை வைத்து ஊடகவியலாளர் சிவம் விஜ் ஒரு கருத்தை எழுதியுள்ளார். அதில் அகிலேஷ் யாதவ் சுதாரித்துக் கொள்ளாவிட்டால் அவரது நிலையும் மோசமாகும் என்று எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக சிவம் விஜ் எழுதியுள்ளதாவது:

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கு லோக்சபாவில் 10 எம்பிக்கள் உள்ளனர். ஆனால் புதிய சட்டசபையில் அக்கட்சிக்கு ஒரே ஒரு எம்எல்ஏதான். இதில் ஒரு கதை அடங்கியுள்ளது.

2017 சட்டசபைத் தேர்தலில் 22 சதவீத வாக்குகளைப் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே ஜெயித்தது. அந்தத் தேர்தலின்போது பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் இணைந்து போட்டியிட வேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டனர், கோரிக்கை வைத்தனர், முயற்சிக்கவும் செய்தனர். உ.பியில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் இந்தக் கூட்டணி தொடர வேண்டும் என்றும் விரும்பினர்.

வழக்கமாக பகுஜன் சமாஜ் கட்சி தேர்தலுக்கு முன்பு கூட்டணி வைப்பதை விரும்பாது. ஆனாலும் மக்களின் விருப்பத்தை அவரால் தட்டிக் கழிக்க முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி 2018ம் ஆண்டு லோக்சபா இடைத் தேர்தலில் கோரக்பூர், பூல்பூர் தொகுதிகளில் அவர் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு கொடுத்தார். இதுவே கூட அவரது சொந்தக் கட்சியிலிருந்து கிளம்பிய பெரும் நெருக்கடியால்தான். பாஜகவை முழுமையாக மாயாவதி எதிர்க்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியினரே தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இடைத் தேர்தலில் பாஜக கோரக்பூர், பூல்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. அந்த இடைத் தேர்தலில் அகிலேஷ் யாதவின் உத்திகள் வென்றன. எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வந்து இதை அவர் சாதித்தார். இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதியம் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.

இந்தக் கூட்டணிக்காக நிறைய விட்டுக் கொடுத்தார் அகிலேஷ். மாயாவதியின் பிடிவாதங்கள் உள்ளிட்டவற்றையும் அவர் பொறுத்துக் கொண்டார். எந்த சீட்டில் போட்டியிட வேண்டும் என்ற தொகுதிப் பங்கீட்டிலும் கூட அவர் விட்டுக் கொடுத்துப் போனார். மாயாவதியின் கோரிக்கையை ஏற்று காங்கிரஸையும் கூட கூட்டணியில் சேர்க்க அவர் மறுத்து விட்டார். ஆனால் இந்தக் கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. 2014ம் ஆண்டு தேர்தலை விட மோசமாகவே இடங்களைப் பெற்றது. 2வது மோடி அலை, புல்வாமா தாக்குதலால் ஏற்பட்ட அனுதாபம் என பல்வேறு காரணங்களால் இந்தத் தேர்தலில் சமஜா்வாதி – பகுஜன் கூட்டணி சோபிக்கவில்லை. இத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10 தொகுதிகளும், சமாஜ்வாதிக்கு 5 தொகுதிகளும் கிடைத்தன.

மாயாவதி – அகிலேஷ் கூட்டணியால் சமாஜ்வாதியை விட பகுஜன் சமாஜ்தான் அதிக லாபம் அடைந்ததாக பலரும் கூறினர். மேலும் சமாஜ்வாதிக்கு தலித் வாக்குகள் செல்லவில்லை என்றும் கூறினர். யாதவ் – முஸ்லீம் வாக்குகள் பகுஜனுக்கு சென்றதாகவும் கூறினர். இதைப் பார்த்து மாயாவதி என்ன செய்தார்? பிரஸ் மீட் வைத்தார். அதில் கூட்டணியின் தோல்விக்கு சமாஜ்வாதியும், அகிலேஷும்தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். கூட்டணி தொடராது என்றும் கூறி விட்டார். சமாஜ்வாதி வாக்குகள் பகுஜனுக்கு வரவில்லை என்பதும் அவரது இன்னொரு குற்றச்சாட்டு.

மாயாவதியின் இந்தப் பேச்சு, பாஜகவுக்கு எதிரான வாக்காளர்கள், முஸ்லீம்கள் ஆகியோர் மனதில் மாயாவதிக்கு எதிரான எண்ணத்தை ஏற்படுத்தியது. மாயாவதி நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்வதாக அவர்கள் அதிருப்தியடைந்தனர். அதேசமயம், அகிலேஷ் யாதவ் எதுவும் பேசவில்லை, உங்களது கருத்துகளுக்கு நன்றி என்று மட்டும் சொல்லி விட்டு அமைதியானார். அவரது இந்த அடக்கமான பேச்சு வாக்காளர்களிடையே அவர் மீதான அனுதாபத்தையும், நல்ல பெயரையும் அதிகரிக்க உதவியது.

10 இடங்களில் வெற்றி பெற்றதால் உ.பி அரசியலில் 3வது இடத்தைப் பிடித்து விட்டார் மாயாவதி. அத்தோடு அவர் அகிலேஷின் உறவையும் முறித்துக் கொண்டு விட்டார். அதன் பிறகு வந்த ஒவ்வொரு தேர்தலிலும் மாயாவதிக்கு தோல்விதான். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் குற்றம் சாட்டியது முஸ்லீம்களைத்தான். ஒரு வேளை சமாஜ்வாதியுடன் மாயாவதி உறவைத் தொடர்ந்திருந்தால் அவருக்கு அகிலேஷை விட கூடுதலாகவே பலன்கள் கிடைத்திருக்கும். ஆனால் மாயாவதியின் எதிர்மறைப் பேச்சுக்கள், கருத்துக்கள், நிலைப்பாடு அவரை முஸ்லீம்களிடமிருந்து மேலும் விலக்கிச் சென்று விட்டது. மொத்தமாக அவர்கள் சமாஜ்வாதி பக்கம் போய் விட்டனர்.

உத்தரப் பிரதேச மாநில அரசியலிலிருந்து பகுஜன் சமாஜ் கட்சி இன்று துடைத்தெறியப்பட்டு விட்டது. ஒற்றை எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது சமாஜ்வாதி. இனிதான் சமாஜ்வாதிக்கு சவால்கள் காத்துள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சமாஜ்வாதி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கட்சியின் இடத்தை வேறு கட்சி பிடித்து விடும். அரசியல் மிகவும் குரூரமானது. சூப்பர் மெஜாரிட்டியுடன் ஒரு தேர்தலில் நீங்கள் ஜெயிப்பீர்கள்.. அடுத்த 3, 4 தேர்தல்களில் உங்களை ஒரு சீட், 2 சீட் அளவுக்கு இறக்கி விட்டு விடும். மாயாவதிக்கு நேர்ந்த கதியிலிருந்து அகிலேஷ் யாதவ் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் சிவம் விஜ்.

அவர் கூறுவதும் சரிதான். பகுஜனுக்கு முன்பு காங்கிரஸுக்கு இந்த கதி ஏற்பட்டது. இன்று வரை அக்கட்சியால் மீள முடியவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியின் மோசமான நிலைக்கு முழுக்க முழுக்க மாயாவதியின் மெத்தனம், அலட்சியம், பிடிவாதம்தான் காரணம். 2022 சட்டசபைத் தேர்தலில் அவர் சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்திருந்தால் ரிசல்ட் வேறு மாதிரியாக போயிருக்கும். இந்த தேர்தலில் சமாஜ்வாதி, பகுஜன் வாங்கிய வாக்குகளைக் கூட்டினால் பாஜகவை விட அதிகமாகவே வருகிறது. எனவே இணைந்திருந்தால் வேறு மாதிரியான சூழலை உ.பி. பார்த்திருக்கும். ஆனால் அதைத் தவற விட்டு விட்டார் மாயாவதி. அவர் பாஜகவுக்கு சாதகமாக நடப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. தொடர்ந்து அதை மாயாவதி மறுத்து வந்தாலும் கூட, அவர் பாஜகவை வலிக்காமல்தான் அடிப்பதாக ஒரு தோற்றம் நிலை பெற்று விட்டது என்பது உண்மையே.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.