வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு ரத்து செல்லும்: சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சராக இருந்தபோது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கல்வி, அரசு வேலை வாய்ப்பு ஆகியவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவீதம் இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது. தமிழக சட்டசபையில் அந்த சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் 1-ந்தேதி உள் ஒதுக்கீட்டுக்கு வகை செய்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது எனக்கூறி அந்த சட்டம் செல்லாது என உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தது. ஆனால் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்தது. இது தொடர்பாக எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
அதன் பிறகு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு தொடர்ந்து விசாரித்து வந்தது. தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் மனுசிங்வி, ராகேஷ் துவிவேதி, பி.வில்சன், முகுல்ரோத்தகி, மனுதாரர் சி.ஆர்.ராஜன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், பா.ம.க. தரப்பில் மூத்த வழக்கறிஞர் எம்.என்.ராவ் உள்ளிட்டோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
எதிர்மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சங்கரநாராயணன், ராஜீவ் தவண், எஸ்.நாகமுத்து, ஆர்.பாலசுப்ரமணியன், கே.எம்.விஜயன், வி.பிரகாஷ் உள்ளிட்டோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
இருதரப்பு வாதங்கள் முடிவடைந்தது. இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் அமர்வு கடந்த பிப்ரவரி 23-ந்தேதி ஒத்தி வைத்திருந்தது. மேலும், வழக்கில் தொடர்புடைய தரப்பினரிடம் எழுத்துப்பூர்வ ஆவணங்கள் ஏதும் இருந்தால், 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், எல்.நாகேஸ்வரராவ் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு அளித்தனர். தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு தந்தது செல்லாது. எனவே தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
உள் ஒதுக்கீடு வழங்கும்போது அதற்கான சரியான, நியாயமான காரணங்களை அரசு தெளிவுபடுத்த வேண்டும். எனவே வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி இருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.