#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்- மரியுபோல் நகரில் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் பின்னடைவு: செஞ்சிலுவை சங்கம் தகவல்

02.04.2022
04.10: ரஷிய போரினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மரியுபோல் நகரில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை வெளியேற்றுவதற்கு அந்நகரத்திற்கு செல்லும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. மூன்று கான்வாய் வாகனங்கள் பாதுகாப்புடன் செஞ்சிலுவை சங்க குழுவினர் மரியுபோல் நகருக்கு செல்ல முடியாமல்  சபோரிஜியாவுக்கு திரும்பி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தங்களது செயல்பாடுகள் வெற்ற பெற இரு தரப்பினரும் ஒப்பந்தங்களை மதித்து பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவது மிகவும் முக்கியமானது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
02.50: ரஷிய எண்ணெய் கிடங்கை உக்ரைன் படைகள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்  இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. துருக்கியில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சியை கைவிட வேண்டும் என்று ரஷிய தூதுக்குழு வலியுறுத்தியது. உக்ரைன் பாதுகாப்பிற்கு ஐரோப்பிய நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று உக்ரைன் சார்பில் பங்கேற்ற தூதுக்குழுவினர் தெரிவித்தனர்.
01.40: எல்லை அருகில் உள்ள எண்ணெய் கிடங்கை உக்ரைன் படைகள்
தாக்கியதாக ரஷியா தெரிவித்துள்ள குற்றச்சாட்டை உடனடியாக ஆய்வு செய்ய முடியவில்லை என்று, உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.  உக்ரைன் படை இந்த தாக்குதலில் ஈடுபட்டதா இல்லையா என்பதை உறுதிபடுத்த முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
 
 01.04.2022
16.00: ரஷியாவின் மேற்கு பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், இது எதிர்காலத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கு தடையாக இருக்கும் என ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கான சூழ்நிலையை உருவாக்கும் விஷயம் அல்ல, என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறி உள்ளார்.
15.45: உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறையை ரஷிய வெளியுறவு மந்திரி லாவ்ரோவ் பாராட்டினார். 
15.00: உக்ரைன் எல்லைக்கு அருகே, ரஷியாவின் மேற்கு நகரமான பெல்கோரோட் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அந்த எண்ணெய் கிடங்கு பற்றி எரிகிறது. உக்ரைனின் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து வந்து தாக்குதல் நடத்தியிருப்பதாக பிராந்திய ஆளுநர் கூறி உள்ளார்.  
14.30: உக்ரைன் மீது ரஷியா பிப்ரவரி மாதம் 24-ம் தேதியன்று படையெடுப்பு தொடங்கியது. அன்று முதல் தற்போது வரை ரஷிய தாக்குதலில் சிக்கி 153 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 245 குழந்தைகள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.