CWC 2022: ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து – இறுதி யுத்தத்தில் வெல்லப்போவது யார்?

கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நாளை நடைபெறவிருக்கும் கோப்பைக்கான இறுதி யுத்தத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஆஸ்திரேலியா

லீக் போட்டிகளில் ஒன்றை கூட தோற்காது அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறது ஆஸ்திரேலியா. இதுவரை ஆறு முறை உலகக்கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியாதான் இம்முறையும் சாம்பியன் ஆகப்போகிறது என்பதே பெரும்பாலோரின் கணிப்பாக இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு அவ்வளவு எளிதில் வெற்றிக்கனி கிட்டிடாத வகையில் இங்கிலாந்து அணியும் பலமாகவே காட்சியளிக்கிறது. ஆக, இந்த இறுதிப்போட்டி மிகுந்த சுவாரஸ்யமாய் இருக்கப்போகிறது என்பதில் எந்தச் சந்தகேமும் இல்லை. தற்போது இரு அணிகளின் ப்ளஸ், மைனஸ்களை பார்த்துவிடுவோம்.

அசத்தலான ஆரம்பம், மிரட்டும் மிடில் ஆர்டர்!

அசுர பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவின் வெற்றிக்குப் பின்னால் உள்ள மூன்று முக்கிய தூண்கள் அலீஸா ஹீலி, ரேச்சல் ஹெய்னஸ் மற்றும் கேப்டன் மெக் லேனிங். இவர்களில் ஒருவர் ஜொலித்தாலும் அது இங்கிலாந்திற்கு மிகப்பெரிய சவாலாகிவிடும். இதில் ஹெய்னஸ் இந்த உலகக்கோப்பையில் விளையாடிய 8 போட்டிகளில் 429 ரன்கள் விளாசி, அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளார். அதே போல அலீஸா ஹீலி 339 ரன்கள் அடித்து அப்பட்டியலின் நான்காம் இடத்தில் உள்ளார். குறிப்பாக இவர்கள் இருவரையும் களத்தில் அதிகநேரம் இருக்கவிடாமல் தடுப்பதே இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது.

ஆஸ்திரேலியா

இந்த மூவரையும் இங்கிலாந்து அணி சமாளித்து விட்டாலும் மிடில் ஆர்டரில் டாலியா மெக்ராத், பெத் மூனி போன்ற பலம் பொருத்திய வரிசையை கொண்டுள்ளது ஆஸ்திரேலியா. இதில் மெக்ராத் இங்கிலாந்திற்கு எதிராக கடைசியாக விளையாடிய தொடரில் தொடர்நாயகி விருது வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

எல்லிஸ் பெர்ரி

எல்லிஸ் பெர்ரியின் பிட்னஸ்தான் ஆஸ்திரேலிய அணியின் ஒரே பின்னடைவு. பங்களாதேஷ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ஏற்பட்ட காயத்தால் அரையிறுதி போட்டியில் விளையாடாத அவர் இறுதிப்போட்டியில் விளையாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Ellyse Perry

நட்சத்திர பௌலர்கள்

இத்தொடரின் 6 ஆட்டங்களில் 9 விக்கெட்களை வீழ்த்தியுள்ள ஆஸ்லே கார்டனர்தான் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரம். பௌலிங் மட்டுமல்லாமல் பீல்டிங்கிலும் பலம் சேர்க்கிறார் இவர். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் அவர் பிடித்த அந்த ஒற்றை கேட்ச்சே அதற்கு சாட்சி. இது தவிர சுழல் டிப்பார்ட்மென்டில் அலனா கிங் நம்பிக்கை அளிக்கிறார்.

இங்கிலாந்தின் நம்பிக்கை:

இந்த உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை சீராக வெளிப்படுத்தத் தவறினாலும் கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது இங்கிலாந்து. தொடக்கத்தில் மூன்று தோல்விகளைச் சந்தித்தாலும் அதன்பின் தன் தவறுகளை சரிசெய்து நான்கு வெற்றிகளைப் பதிவு செய்து, தற்போது இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட்தான் இதற்கான முக்கிய காரணம். தோல்விப் பாதையில் சென்ற இங்கிலாந்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துவந்தது போல, தொடர்ந்து இரண்டாவது முறையாக இங்கிலாந்தை உலகக்கோப்பை வெல்ல வைப்பதிலும் மிக உறுதியாக இருக்கிறார் ஹீதர்.

ஹீதர் நைட்

பௌலிங் புலி:

ஹீதரைத் தாண்டி இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரம் பந்து வீச்சாளர் சோபி எக்கில்ஸ்டோன்தான். இத்தொடரில் 8 போட்டிகள் விளையாடி 20 விக்கெட்டுகளைக் கைபற்றியிருக்கும் இவர் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்குப் பெரிய சவாலாக நிச்சயம் இருப்பார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் 6 விக்கெட்டுகளைக் கைபற்றி இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் ஹீதர்.

இங்கிலாந்து

1982-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லின் புல்ஸ்டன் எடுத்த 23 விக்கெட்களே மகளிர் உலகக்கோப்பைகளில் இதுவரையிலான சாதனை. அவரின் இந்த நீண்ட கால சாதனையை இம்முறை சோபி முறியடிப்பாரா என்பதும் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் பலமான பார்ட்னர்ஷிப்பை உடைப்பதில் எக்கில்ஸ்டோன் பெரும் பங்காற்றுவார்.

கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் நேருக்கு நேர் சந்திக்க இருக்கின்றன. கோப்பையை வெல்லப்போவது யார்?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.