#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: 18 ஆயிரம் ரஷிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்- உக்ரைன் தகவல்

03.04.2022
19.00: கெர்சன் மாகாணத்தில் உள்ள ஸ்னோவ்ஸ்க் மேயர், செர்னிஹிவ் மாகாணத்தில் உள்ள பெரிஸ்லாவ் மேயர் ஆகியோர் ரஷியாவிடம் இருந்து விடுவிக்கப்பட்டதாக கீவ் மேயர் தெரிவித்துள்ளார்.
18.30: உக்ரைனில் ரஷிய ராணுவத்தால் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகரில், லிதுவேனியாவைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர் மேன்டஸ் கிவேதரவிசியஸ் கொல்லப்பட்டுள்ளார். 
17.00: மைகோலைவ் நகரில் ரஷியா ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக அந்நகர மேயர் தெரிவித்தார்.
15.30: புச்சா படுகொலை தொடர்பான ரஷியாவிடம் விசாரணை நடத்த ஐரோப்பியன் யூனியன் உதவி புரியும் எனத் தெரிவித்துள்ளது.
14.40: கீவ் நகரில் இருந்து ரஷிய படைகள் முழுமையாக வெளியேறியுள்ள நிலையில், ஆங்காங்கே கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டு உள்ளதால் மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
12.25: உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளைக் கைப்பற்றுவதே ரஷியாவின் நோக்கம் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷிய படைகளை எதிர்த்து தாக்குவதற்கு தேவையான ஆயுதங்களை மேற்கத்திய நாடுகள் அளிக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
10.20: உக்ரைன் ராணுவம் புச்சா நகரை தங்கள் பாதுகாப்பில் எடுத்துக் கொண்டது. புச்சாவில் உள்ள ஒரு வெகுஜன புதைகுழியில் சுமார் 300 பேர் புதைக்கப்பட்டதாகவும், அந்த நகரம் முழுவதும் சடலங்கள் சிதறிக் கிடப்பதாகவும் அந்நகர மேயர் தகவல் தெரிவித்துள்ளார்.
07.30: உக்ரைன் தலைநகர் அருகிலுள்ள சில முக்கிய நகரங்களில் இருந்து ரஷியப் படைகள் பின்வாங்கியதைத் தொடர்ந்து கீவ் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் முழுமையாக கைப்பற்றி உள்ளோம் என துணை பாதுகாப்பு மந்திரி கன்னா மாலியர் தெரிவித்தார்.
இர்பின், புச்சா, கோஸ்டோமல் மற்றும் முழு கீவ் பகுதியும் ரஷிய படையெடுப்பாளரிடமிருந்து விடுவிக்கப்பட்டது என அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
03.50: போர் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 18,000 ரஷிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு நாடுகள் இடையேயான போரில் 7,000 முதல் 15,000 வரை ரஷிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக நேட்டோ அமைப்பு மதிப்பிட்டிருந்த நிலையில், பலியான ரஷிய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.
02.04.2022
23.30: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய அதிபர் புதின், போர் குற்றவாளி என்றும் அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை வழக்கஞர் கார்லா டெல் பொன்டே வலியுறுத்தி உள்ளார்.
22.50: உக்ரைன் தெற்கு பகுதி நகரமான எனர்ஹோடரில் ரஷியா ஆக்ரமிப்புக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது ரஷியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் நான்கு பேர்  காயமடைந்ததாகவும் உக்ரைன் அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார். 
18.00: உக்ரைன் மீது பிப்ரவரி 24ம் தேதி ரஷியாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, இதுவரை கிட்டத்தட்ட 41 லட்சம் உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நா. கூறி உள்ளது.
17.30: உக்ரைனின் தலைநகர் பகுதியில் இருந்து ரஷியப் படைகள் பின்வாங்கும்போது, வீடுகளைச் சுற்றி கண்ணிவெடிகள், கைவிடப்பட்ட சாதனங்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களின் உடல்களைக் கூட விட்டுவிட்டு பொதுமக்களுக்கு பேரழிவு சூழ்நிலையை உருவாக்குவதாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.
16.40: உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பு தொடர்பாக புதினை இதுவரை விமர்சிக்காத போப் பிரான்சிஸ், முதல் முறையாக இன்று மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஒரு வல்லமை தேசியவாத நலன்களுக்காக மோதல்களைத் தூண்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
13.15: ரஷியாவின் மேற்கு நகரமான பெல்கோரோட் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது, உக்ரைனின் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து வந்து தாக்குதல் நடத்தியதாக பிராந்திய ஆளுநர் தெரிவித்தார். ஆனால் நாங்கள் இந்த தாக்குதலைநடத்தவில்லை என உக்ரைன் அரசு மறுத்துள்ளது.
11.30: ரஷியா நடத்திய தாக்குதலால் உக்ரைனின் கிழக்கு கார்கீவ் பகுதியில் உள்ள 12 நினைவுச் சின்னங்கள் சேதமடைந்தன. தேவாலயம், வரலாற்றுக் கட்டிடங்கள், அருங்காட்சியகங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட கலாச்சார சின்னங்கள் போரினால் சேதமடைந்துள்ளன என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
08.45: போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு, தற்காப்பு நடவடிக்கைகளை மேம்படுத்திக் கொள்வதற்காக 300 மில்லியன் டாலர் நிதியை வழங்குகிறோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
04.10: ரஷிய போரினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மரியுபோல் நகரில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை வெளியேற்றுவதற்கு அந்நகரத்திற்கு செல்லும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. மூன்று கான்வாய் வாகனங்கள் பாதுகாப்புடன் செஞ்சிலுவை சங்க குழுவினர் மரியுபோல் நகருக்கு செல்ல முடியாமல்  சபோரிஜியாவுக்கு திரும்பி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தங்களது செயல்பாடுகள் வெற்ற பெற இரு தரப்பினரும் ஒப்பந்தங்களை மதித்து பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவது மிகவும் முக்கியமானது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
02.50: ரஷிய எண்ணெய் கிடங்கை உக்ரைன் படைகள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்  இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. துருக்கியில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சியை கைவிட வேண்டும் என்று ரஷிய தூதுக்குழு வலியுறுத்தியது. உக்ரைன் பாதுகாப்பிற்கு ஐரோப்பிய நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று உக்ரைன் சார்பில் பங்கேற்ற தூதுக்குழுவினர் தெரிவித்தனர்.
01.40: எல்லை அருகில் உள்ள எண்ணெய் கிடங்கை உக்ரைன் படைகள்
தாக்கியதாக ரஷியா தெரிவித்துள்ள குற்றச்சாட்டை உடனடியாக ஆய்வு செய்ய முடியவில்லை என்று, உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.  உக்ரைன் படை இந்த தாக்குதலில் ஈடுபட்டதா இல்லையா என்பதை உறுதிபடுத்த முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
 
 01.04.2022
16.00: ரஷியாவின் மேற்கு பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், இது எதிர்காலத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கு தடையாக இருக்கும் என ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கான சூழ்நிலையை உருவாக்கும் விஷயம் அல்ல, என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறி உள்ளார்.
15.45: உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறையை ரஷிய வெளியுறவு மந்திரி லாவ்ரோவ் பாராட்டினார். 
15.00: உக்ரைன் எல்லைக்கு அருகே, ரஷியாவின் மேற்கு நகரமான பெல்கோரோட் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அந்த எண்ணெய் கிடங்கு பற்றி எரிகிறது. உக்ரைனின் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து வந்து தாக்குதல் நடத்தியிருப்பதாக பிராந்திய ஆளுநர் கூறி உள்ளார்.  
14.30: உக்ரைன் மீது ரஷியா பிப்ரவரி மாதம் 24-ம் தேதியன்று படையெடுப்பு தொடங்கியது. அன்று முதல் தற்போது வரை ரஷிய தாக்குதலில் சிக்கி 153 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 245 குழந்தைகள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.