அஞ்சனாத்ரி மலை அபிவிருத்தி மும்முரம்| Dinamalar

பெங்களூரு : ”ஆஞ்சனேயர் பிறந்த இடமான, அஞ்சனாத்ரி புண்ணிய தலத்தை அபிவிருத்தி செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பட்ஜெட்டில், 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,” என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

ஸ்ரீராமசேவா அமைப்பின் சார்பில், பெங்களூரில் ஏற்பாடு செய்திருந்த சங்கீத நிகழ்ச்சியை, முதல்வர் பசவராஜ் பொம்மை துவக்கி வைத்தார்.பின், அவர் பேசியதாவது:ஹம்பி அருகிலுள்ள, ஆஞ்சனேயர் பிறப்பிடமான அஞ்சனாத்ரி புண்ணிய தலத்தை, அபிவிருத்தி செய்ய மாநில அரசு பட்ஜெட்டில், 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. நடப்பாண்டு திட்டம் தயாரித்து, அபிவிருத்தி பணிகள் துவங்கப்படும்.வல்லுனர்களின் ஆலோசனைப்படி, பணிகள் நடத்தப்படும். இன்போசிஸ் அறக்கட்டளை தலைவி சுதா மூர்த்திக்கு தெரிந்த வல்லுனர்களின் பெயரை தெரிவிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளோம்.ஒவ்வொரு சப்தத்துக்கும், தன்னுடையதேயான ராகம், தாளம் இருக்கும். சங்கீதம் மனிதனின் உற்சாகம், ஆனந்தம், அமைதியை அதிகமாக்கும் ஒரு ஊடகம். சோர்வாக இருக்கும் போது, சங்கீதம் கேட்டால் மனதில் உற்சாகம் பிறக்கும்.ஸ்ரீராமசேவா அமைப்பினர், 80 ஆண்டுகளாக இந்த சங்கீத உற்சவத்தை ஏற்பாடு செய்கின்றனர். இவர்கள் பாராட்ட தகுந்தவர்கள். சங்கீதத்தால் பக்தி அபிவிருத்தியடையும். சில பக்தி பாடல்கள், தாக்கத்தை ஏற்படுத்தும். நான் ஸ்ரீராமர், ஆஞ்சனேயர் பக்தன். சங்கீதத்துக்கும் பக்தன்.கன்னட மண்ணின் கலாச்சாரம், மிகவும் சிறப்பானது. பக்தி பாடல்கள் உட்பட பல்வேறு விதமான சங்கீதம், கர்நாடகாவில் உள்ளது. வேறெங்கும் இல்லாத சங்கீதம், நம் மாநிலத்தில் உள்ளது. கர்நாடக சங்கீதம் பக்திக்கு பிரதானம்.ஸ்ரீராமசேவா அமைப்பினர் நடத்தும், சங்கீத உற்சவத்தில், பிரபலமான சங்கீத வித்வான்கள், கச்சேரி நடத்துவர். பா.ஜ., அரசு கலை, இலக்கியம், சங்கீதம், கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் தந்துள்ளது. கன்னட மொழி, மண், நீர், மக்களின் நலனை காக்க, கலை, இலக்கியம், கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும். இதற்காக என்னென்ன செய்ய முடியுமோ, அதை அரசு செய்யும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.