டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் மத்திய அரசு மக்களிடமே இருந்து பணத்தை திருடுவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாடியுள்ளார். 5 மாநில தேர்தலை ஒட்டி 4 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் கடந்த 22ம் தேதியில் இருந்து 2 நாட்கள் தவிர தினமும் அவற்றின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இன்றும் லிட்டருக்கு தலா 38 காசுகள் உயர்த்தப்பட்டு சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 109 ரூபாய் 34 காசுகளுக்கும், டீசல் 99 ரூபாய் 42 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 14 நாட்களில் 9 ரூபாய் அளவுக்கு விலை அதிகரித்திருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் மாநிலங்களவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்குமாறு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் இதனை ஏற்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட்ட மாநிலங்களவை, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க பாஜக அரசு கடமைப்பட்டிருப்பதாக திமுக உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்தார். இதனிடையே காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது வாகனங்களில் எரிபொருள் நிரப்ப எவ்வளவு தேவைப்பட்டது, தற்போது எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என்பதை ஒப்பீடு செய்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி; பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்ற பெயரில் மக்களின் பணத்தை பிரதமர் கொள்ளையடிப்பதாக சாடியுளார்.
