அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கை நிலை இந்தியாவுக்கும் வரும்: குமாரசாமி எச்சரிக்கை

பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக அரசு மதமாற்ற தடை மற்றும் பசுவதை தடை சட்ட மசோதாக்களை கொண்டு வந்தது. இதை ஜனதா தளம் (எஸ்) ஆதரித்ததாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மதமாற்ற தடை சட்ட மசோதாவை கொண்டு வந்ததே சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது காங்கிரஸ் ஆட்சியில் தான் என்று பா.ஜனதா ஆதாரத்துடன் சட்டசபை கூட்டத்தில் நிரூபித்தது. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் வாயடைத்து போனார்கள்.

பசுவதை தடை சட்ட மசோதாவை நாங்கள் ஆதரிக்கவில்லை. அதை எதிர்த்தோம். தற்போது ஹிஜாப், ஹலால் விவகாரங்களில் காங்கிரஸ் தலைவர்கள் பேசாமல் அமைதி காக்கிறார்கள். இந்து ஓட்டுக்கள் போய்விடுமோ என்ற பயம் அவர்களை ஆட்கொண்டுள்ளது. அதனால் இந்த விஷயத்தில் மவுனமாக இருக்கிறார்கள். ஆனால் நான் எதற்கும் பயப்படாமல் தைரியமாக பேசி வருகிறேன். அனைத்து சமுதாய மக்களும் எங்களுக்கு முக்கியம். இந்த அரசுக்கு எதிராக நாங்கள் தற்போது போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.

அமைதி பூங்காவாக உள்ள கர்நாடகத்தில் தீயை பற்ற வைத்துள்ளனர். இதற்கு காரணம் காங்கிரஸ். கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைய காரணமே காங்கிரஸ் தான். ஹிஜாப், ஹலால் விவகாரத்தில் மாநில அரசு மவுனமாக உள்ளது. நடிகர் சேத்தன் ஏதோ கூறிவிட்டார் என்பதற்காக அவரை பிடித்து போலீசார் சிறையில் தள்ளினர். ஆனால் இப்போது ஹலால் விவகாரம் மூலம் அமைதிக்கு பங்கத்தை ஏற்படுத்தி வரும் சில இந்து அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?.

நாங்கள் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கிறோம். இது எங்கள் கலாசாரம். காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கு வரி விலக்கு கொடுத்தனர். ஆனால் ஏழைக்களின் பைல்ஸ் முதல்-மந்திரி மற்றும் மந்திரிகளிடம் அதிகமாக உள்ளது. அவற்றுக்கு வரி விலக்கு கொடுக்க வேண்டியது தானே. ஹிஜாப், ஹலால் போன்ற விவகாரங்கள் தொடர்ந்து நீடித்தால், அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை தான் இந்தியாவிலும் ஏற்படும்.

பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துவிட்டது. இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக இந்து அமைப்புகள் போராட வேண்டியது தானே. தேசிய கட்சிகள் வெற்றி பெற 150 தொகுதிகளை இலக்கு நிர்ணயித்துள்ளன. நாங்கள் 123 தொகுதிகளில் வெற்றி பெற ஏற்கனவே இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

இந்து-முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கம் இல்லாவிட்டால் அமைதி போய்விடும். மாநிலத்தில் ஹிஜாப் உள்பட இவ்வளவு விஷயங்கள் நடந்து வந்தாலும் முதல்-மந்திரி மட்டும் வாய் திறக்காமல் அமைதியாக இருக்கிறார். அதனால் தான் நான் அன்று ஆவேசமாக பேசினேன். பசவராஜ் ஹொரட்டி என்னிடம் வந்து, பா.ஜனதாவில் இருந்து அழைப்பு வருகிறது, அக்கட்சியில் சேரட்டுமா? என்று கேட்டார். தாராளமாக செல்லுங்கள் என்று கூறினேன். இப்போது பா.ஜனதாவில் சேருவதாக அவர் அறிவித்துள்ளார். இதனால் எனக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.