ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை- தொற்று நீங்கியதால் டாக்டர்கள் மகிழ்ச்சி

சென்னை:

கொரோனா
பெருந்தொற்று நாடு முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிந்தன. இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய முடியாமல் பிணங்கள் வரிசை கட்டி நின்ற நாட்கள் பல.

சென்னையில் கட்டுப்படுத்த முடியாமல்
கொரோனா
கோர தாண்டவமாடியது என்றால் மிகையல்ல.

இந்த நிலையில் இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில்
கொரோனா
நோயாளிகள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கொரோனா நோயாளிகள் ஒருவர் கூட இல்லாத நாளாக இன்றைய தினம் அமைந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுதான் கொரோனா நோயாளிகள் இல்லாத நாளாக மாறி உள்ளது. இதனால் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒருவருக்கொருவர் கை குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்த நாள் என்று வருமோ என ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்தோம். 2 ஆண்டுகள் 35 நாட்கள் இதற்காக காத்திருந்துள்ளோம் என்றார்கள் அவர்கள்.

இதுபற்றி டீன் தேரணி ராஜன் கூறியதாவது:

இந்த நாள் மிகவும் மகிழ்ச்சிகரமான நாள். அனைவரின் கடின உழைப்பு, கூட்டு முயற்சியால் இந்த நிலையை எட்டி இருக்கிறோம்.

இந்த நிலையை எட்டுவதற்காக கடந்து வந்த பாதையும், சந்தித்த சவால்களும் சாதாரணமானதல்ல.

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 7-ந்தேதி ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் முதல்
கொரோனா
நோயாளி அனுமதிக்கப்பட்டார். அன்று தொடங்கிய கொரோனா நெருக்கடியில் மருத்துவ துறையினர் மிகப்பெரிய சவால்களை சந்தித்தோம்.

2-வது அலை உச்சத்தில் இருந்தபோது ஆக்சிஜன் தேவை என்பது தினசரி 47 மெட்ரிக் டன்னாக இருந்தது. அதை சமாளிக்க முடியாமல் திணறினோம். 250 ஆம்புலன்சுகளில் நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு வெளியே காத்திருந்தார்கள். அவர்களுக்கு ஆம்புலன்ஸ்சுகளிலேயே சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கொரோனா நோயாளிகளின் அருகில் செல்லக்கூடாது என்ற நிலையில் அவர்களது உறவினர்களை சமாளிப்பதும் சவாலாக இருந்தது.

எல்லாவற்றிக்கும் மேலாக டாக்டர்கள், செவிவியர்கள் தொடர்ந்து 6 மணி நேரம் பாதுகாப்பு உடைகளை அணிந்து பணியாற்றுவதில் மிகவும் சிரமப்பட்டார்கள்.

65 ஆயிரம் பேருக்கு இதுவரை சிகிச்சை அளித்துள்ளோம். 100 வயதான கணவர் மற்றும் 94 வயதான அவரது மனைவி ஆகியோரும்
கொரோனா
வுக்கு சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினார்கள்.

சிகிச்சை பெற்றவர்களில் 96 சதவீதம் பேர் காப்பாற்றப்பட்டனர். 4 சதவீதம் பேர் உயிர் இழந்தனர். மருத்துவ பணியாளர்களின் அனுபவத்தில் மறக்க முடியாதது கொரோனா காலம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.