சொத்துவரி உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்து கூறலாம்-மாநகராட்சி

சென்னை:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடியிருப்புகள், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது.

600 சதுர அடி பரப்பளவிற்குள் உள்ள குடியிருப்புகளுக்கு 1.5 மடங்கும், 601-1200 சதுர அடிக்கு 1.75 மடங்கும், 1201-1800 சதுர அடி பரப்பளவிற்கு 2 மடங்கும், 1801 சதுர அடிக்கு மேல் 2.5 மடங்கும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு 2 மடங்கும், குடியிருப்பு அல்லாத பகுதிகளுக்கு 2.5 மடங்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு வரிவிதிப்பு குறைவாகவும், முந்தைய சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு சற்று அதிகமாகவும் சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட சொத்து வரி மடங்குடன் தற்போது நடைமுறையில் உள்ள அடிப்படை தெரு கட்டணத்துடன் பெருக்கி நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் தற்போது தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு அவை வசூலிக்கும் நாள் வாடகை அடிப்படையிலும், திரையரங்குகளுக்கு அவை வசூலிக்கும் இருக்கை கட்டணம் அடிப்படையிலும் சிறப்பு வகை கட்டணம் என குறிப்பிடப்பட்டு சொத்துவரி வசூலிக்கப்படுகிறது.

இந்த வரிவிதிப்பு முறைகளால் நிர்வாக சிக்கல்கள், தேவையற்ற வழக்குகள் தொடரப்படுவதால் இவ்வகை கட்டிடங்களுக்கு குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு விதிக்கபடு வதைப்போல் சொத்துவரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் 2021-2022 சொத்து வரி பழைய முறையில் செலுத்தப்பட வேண்டும். அனைத்து நிலுவை வரியினை செலுத்திய பிறகு புதிய அடிப்படை தெரு கட்டணத்தில் புதிய கணக்கீட்டு முறையில் 2022-23-ம் ஆண்டிற்கான முதல் அரையாண்டு சொத்து வரி செலுத்தப்பட வேண்டும்.

சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்வது குறித்து ஆட்சேபனைகள் இருந்தால் அதனை 30 நாட்களுக்குள் எழுத்து மூலமாக மாநகராட்சி ஆணையருக்கு தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் ஆன்லைன் வழியாகவும், நேரடியாகவும் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

அனைத்து மண்டல அலுவலகங்களிலும் சொத்து வரி உயர்வு குறித்த ஆட்சேபனை கடிதங்களை கமி‌ஷனருக்கு முகவரியிட்டு கொடுக்கலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கான அவகாசம் முடிந்தவுடன் மன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறை வேற்றப்படும். மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு சொத்துவரி உயர்வு ஏப்ரல் 1-ல் இருந்து நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்… குமரியில் மழை நீடிப்பு- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 10 நாளில் 6 அடி உயர்வு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.