மதுரையில் கள்ளழகர் எதிர்சேவை: வைகையாற்றில் நாளை இறங்குகிறார்

உலக புகழ்பெற்ற இந்த நிகழ்ச்சிக்காக அழகர் கோவில் மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று மாலை புறப்பட்டார். பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா….” என்ற கோ‌ஷத்துடன் அழகரை வரவேற்றனர்.

தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோவில் முன்பு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. அதன் பிறகு சுந்தரராஜ பெருமாள் கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளர் வேடத்தில் கைகளில் நேரிக்கம்பு ஏந்தி தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.

வழிநெடுக அவருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பொய்கை கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் அழகர் எழுந்தருளினார்.

அவருக்கு பக்தர்கள் நெல் உள்ளிட்ட தானிய வகைகளை காணிக்கையாக செலுத்தினர். அதனை ஏற்றுக் கொண்டு பக்தர்கள் வெள்ளத்தில் கள்ளழகர் இன்று காலை மூன்று மாவடி வந்தார். அங்கு அவரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்துச் செல்லும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் “கோவிந்தா” கோ‌ஷம் எழுப்பி அழகரை தரிசனம் செய்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் மதுரை மாநகருக்குள் வருவதால் பக்தர்கள் அதிக அளவில் திரண்டனர். அவர்கள் சர்க்கரை செம்பில் சூடம் ஏற்றி, விளக்கேற்றி கள்ளழகரை வரவேற்றனர்.

தொடர்ந்து புதூர் உள்பட பல இடங்ளிலும் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெற்றது. அவர் பல்வேறு மண்டகப்படிகளிலும் எழுந்தருளினார். அனைத்து இடங்களிலும் பக்தர்கள் அழகரை தரிசித்தனர்.

இரவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு கள்ளழகர் வந்து சேருகிறார். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. அங்கிருந்து அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் பட்டு வஸ்திரங்களை அணிந்து கொண்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

தொடர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் இறங்க புறப்படுகிறார். வழியில் கருப்பண்ண சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

நாளை அதிகாலை 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் வைகையாற்றில் கள்ளழகர் இறங்குகிறார். இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளனர். போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கள்ளழகர் மதுரை வந்துவிட்டதை அனைவருக்கும் நினைவுபடுத்தும் வகையில் மதுரை நகர சாலைகளில் கள்ளழகர் வேடமணிந்த பக்தர்கள் தோல் பையில் நீரை வைத்து தெளித்துக் கொண்டே செல்வதை காண முடிந்தது.

இதையும் படிக்கலாம்….
மதுரையில் இன்று காலை சித்திரை திருவிழா தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.