மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள நர்சை காப்பாற்ற தாயார் முயற்சி- மத்திய அரசு உதவி செய்ய கோரிக்கை

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரேமகுமாரி. இவரது மகள் நிமிஷா. இவர் ஏமன் நாட்டில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு ஏமன் நாட்டை சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கில் நிமிஷா கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த ஏமன் நீதி மன்றனம், நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தகவல் அறிந்த நிமிஷாவின் தாயார், அவரை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டார். இதற்காக மத்திய, மாநில அரசுகளிடம் உதவி கோரினார்.

இதற்கிடையே ஏமன் நாட்டு சட்டப்படி அங்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர், பாதிப்புக்கு ஆளான குடும்பத்தினரை சந்தித்து சமரசம் பேசலாம். மேலும் அவர்களின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கி அதனை அவர்கள் பெற்று கொண்டால், குற்றவாளி தண்டனையில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

இந்த தகவல் அறிந்த நர்சு நிமிஷாவின் தாயார் பிரேம குமாரி, மகளை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் இதுதொடர்பாக ஏமன் சென்று பாதிக்கப்பட்ட ஏமன் நாட்டவரின் குடும்பத்தை சந்திக்கவும் திட்டமிட்டு உள்ளார்.

இதற்கு மத்திய அரசின் வெளியுறவு துறை உதவி செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.