வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்திப் பரவசம்

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கள்ளழகர் இன்று அதிகாலை பச்சைப் பட்டுடுத்தி குதிரை வாகனத்தில் வைகைஆற்றில் எழுந்தருளினார். இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

மதுரையின் சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை கள்ளழகர் ஆற்றில் இறங்குவதைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்துள்ளனர்.

இன்று அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்தனர், பச்சை பட்டுடுத்திய கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருளினார். கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றார் வெள்ளிக் குதிரையில் வந்த வீரராகவப் பெருமாள்.. கள்ளழகர் சார்பில் தீர்த்தம், பரிவட்டம், மாலை வழங்கி முதல் மரியாதை செய்யப்பட்டது.

கொரோனா ஊரடங்கால், இரண்டு ஆண்டுகளாக மீனாட்சி திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் கோவிலுக்குள் பக்தர்களின்றி நடத்தப்பட்டன. இந்தாண்டு ஊரடங்கு தளர்வால், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி, மதுரை மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக பல ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்துசெல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்துகழகத்தின் சார்பில் மதுரைக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.