உதவித்தொகை வழங்குவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு பாரபட்சம் காட்டவில்லை- தமிழக அரசு விளக்கம்

சென்னை:
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகரித்து வழங்குவது தொடர்பாக நேத்ரோதயா என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது சொற்ப அளவிலான உதவித்தொகை வழங்கி மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்த வேண்டாம் என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். 
உதவித்தொகையை அதிகரித்து வழங்குவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உதவித்தொகையை அதிகரித்து வழங்கும் விஷயத்தில் சமூக நலத்துறை செயலாளர் அக்கறையுடன் செயல்படவில்லை என தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை குறித்து விளக்கம் அளித்தார். 
‘உதவித் தொகை வழங்குவதில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பாரபட்சம் காட்டப்படவில்லை. வேலைக்குச் சென்று வருமானம் ஈட்ட முடியாத 5 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2500, மற்ற 16 வகையானவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. பேருந்து பயண சலுகை, மருத்துவ உதவி உள்ளிட்ட பிற சலுகைகளும் வழங்கப்படுகின்றன’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சமூக நலத்துறை முதன்மை செயலாளர் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் விலக்கு அளிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். உதவித்தொகை உயர்த்தி வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கும்படி அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 8ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.