தூங்காதே தம்பி தூங்காதே.. மது போதையில் தூங்கியவன் பார்த்த பணி இழந்தான். .! நல்ல வசூலோ துரை தூங்குது..!

மணப்பாறை வட்டாச்சியர் அலுவகத்தில் பணி நேரத்தில் மது போதையில் இருக்கையில் அமர்ந்தபடியே தூங்கிய பதிவறை எழுத்தர் மயங்கி விழுந்ததால் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தின் கீழ் மணப்பாறை, பண்ணப்பட்டி, வையம்பட்டி, வீ .பெரிய பட்டி உள்ளிட்ட 4 குறுவட்டங்களும், 51 வருவாய் கிராமங்களும் உள்ளது. இந்த வருவாய் கிராமங்களில் உள்ள பொதுமக்கள், பட்டா, நில அளவீடு, உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பணிகளுக்காக ஏராளமானோர் தினசரி வட்டாட்சியர் அலுவலகம் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இங்குள்ள பதிவறை அலுவலகத்தில் பதிவறை உதவியாளராக பணிபுரியும் அன்புச் செல்வன் என்பவர் சம்பவத்தன்று பணி நேரத்தில் மதுபோதையின் உச்சகட்ட மயக்கத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.

அப்படியே அசந்து தூங்கிய அவரை பார்த்ததும் அங்கு சென்ற பொது மக்கள் , அவர் பணி செய்யும் அழகை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.

இந்த வீடியோ காட்சியை வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி புகார் அளித்துள்ளனர். இதற்க்கிடையே மதுமயக்கத்தின் உச்சத்தில் இருந்த அன்புச்செல்வன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்தும் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் பதறிப் போய் அன்புச் செல்வனை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அன்பு செல்வன் மிதமிஞ்சிய மதுமயக்கத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், அவரை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து மணப்பாறை வட்டாட்சியர் கீதாராணி கூறும் போது, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளித்ததாகவும், இதனடிப்படையில், பதிவறை உதவியாளர் அன்புச்செல்வன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

படைதனில் தூங்கியவன் வெற்றி இழப்பான், அரசு பணியில் போதையில் தூங்கியவன் வேலை இழப்பான் என்பதற்கு நிகழ்கால சாட்சியாகி இருக்கின்றது இந்த சம்பவம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.