லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – மரியுபோல் எஃகு ஆலையைத் தாக்க ரஷியப் படைகள் முயற்சி

23.4.22


19.20: உக்ரைனின் லுகான்ஸ்க் பிராந்தியத்தின் முன் வரிசை நகரமான ஸோலோட் மீது ரஷிய படைகள் பீரங்கித் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 2 பேர் காயமடைந்தனர் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
19.00: ரஷியா கிழக்கு பகுதியை குறிவைத்துள்ள நிலையில், மரியுபோலில் எஃகு ஆலைக்குள் தஞ்சம் புகுந்த பெண்களும் குழந்தைகளும் அங்கிருந்து வெளியே வர விரும்புவதாக கூறும் காணொளி வெளியாகி உள்ளது. 
18.30: உக்ரைன் துறைமுக நகரமான ஒடேசாவில் உள்கட்டமைப்புகள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் அதிகாரிகள் கூறி உள்ளனர். ஆனால் விரிவான விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை.
17.00: ரஷிய படைகள் மரியுபோலில் உள்ள உக்ரைன் படைகளின் கடைசி பாதுகாப்பு கோட்டையான அசோவ்ஸ்டால் எஃகு ஆலையைத் தாக்க முயற்சிப்பதாக உக்ரைன் அதிபர் அலுவலக ஆலோசகர் தகவல் தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகள் அசோவ்ஸ்டால் பகுதியில் மீண்டும் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியிருப்பதாக அவர் கூறினார்.
14.50: கார்கிவ் பகுதியில் உக்ரைன் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும்,  மேலும் உக்ரைனின் மூன்று எம்ஐ 8 ரக ஹெலிகாப்டர்களை அழித்ததாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த கருத்திற்கு உக்ரைன் இதுவரை பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.
14.17: உக்ரைனுக்கு எதிரான போரில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷியாவிற்கு எந்த முன்னேற்றமும் இல்லை என பிரிட்டன் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைனின் எதிர்தாக்குதல் பெரிதும் கைக்கொடுக்கின்றன. ரஷியா மரியுபோல் நகரை கைப்பற்றிவிட்டதாக அறிவித்தாலும் உக்ரைன் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றன. விமானம் மற்றும் கடற்படைகளின் தாக்குதலில் உக்ரைன் முன்னேற்றம் கண்டுள்ளது என கூறியுள்ளது.
11.40:  கிழக்கு உக்ரைனில் உள்ள 42 சிறிய அளவிலான நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றியதாக உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும் ரஷிய படைகள் அந்த பகுதிகளில் உள்ள முக்கிய பகுதிகளை கைப்பற்ற கடுமையான சண்டையை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10.20:  உக்ரைன் படைகள் எதிர் தாக்குதல் நடத்தி வருவதால், கடந்த 24 மணி நேரத்தில் ரிஷியப் படைகள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது. மரியுபோல் துறைமுக நகரத்தை ரஷியா கைப்பற்றியதாக கூறப்பட்ட போதிலும், பிற நகரங்களை கைப்பற்றும் முயற்சிகளில் ரஷிய படைகள் தோல்வி அடைந்து வருவதாகவும் பிரிட்டன் உளவுத்துறை கூறியுள்ளது.

 

9.10:  உக்ரைன்-ரஷியா இடையேயான போர் ஒரு சதுரங்க விளையாட்டு அல்ல என்றும், அது ஒருபோதும் சமநிலை பெறாது என்றும், ரஷிய கிராண்ட் மாஸ்டர் கேரி காஸ்பரோவ் தெரிவித்துள்ளார்.  உக்ரைனில் ரஷியா மேற்கொண்டுள்ள ஆக்ரமிப்பு குறித்து பேசிய அவர், புதின் ஒரு புவிசார் அரசியல் போக்கர் பிளேயர் என்றும், அவரது நடவடிக்கை ரஷியாவின் ரவுலட் போன்றது என்றும்  கேரி காஸ்பரோவ் விமர்சித்துள்ளார்.
06.35: உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாகவும், குடிமக்கள் பலர் கொல்லப்படுவதாகவும் செய்தி வெளியானது.
இந்நிலையில், புச்சா படுகொலை குறித்த செய்தியை வாசித்த ஜப்பானிய செய்தி வாசிப்பாளர் யூமிகோ மட்சுவோ நேரலையிலேயே கண்ணீர் விட்டு அழுதார். சில நொடிகளில் சகஜ நிலைக்கு வந்த அவர், அதன்பின் செய்தி வாசிப்பை தொடர்ந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
04.45: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் இரு தரப்பிலும் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. 
உக்ரைன் நடத்திய பதில் தாக்குதலில் 21,200க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. 2,162 ராணுவ வாகனங்கள் சேதமடைந்துள்ளன. ரஷிய ராணுவத்தின் 83 பீரங்கிகள், 176 போர் விமானங்கள், 153 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
00.25: ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் ஆண்டனிட்யோ குட்டரெஸ் அடுத்த வாரம் சந்திக்கிறார். இந்த சந்திப்பு ரஷியாவில் நடைபெற உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.