குன்றத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

பூந்தமல்லி :

குன்றத்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் பழமையான வரலாற்று சிறப்புமிக்கது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகரை தரிசனம் செய்து செல்கின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கோவில் கோபுரங்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் புதுப்பித்து வர்ணம் பூசும் பணி முழுமை அடைந்தது. தொடர்ந்து கடந்த 20-ந்தேதி கணபதி ஹோமம், கஜ பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

இன்று காலை 6-ம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், சிவஞான பாலையாசுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேக விழா காலை 6 மணி முதல் 7.30 மணிக்கு நடைபெற்றது.

சிறப்பு பூஜைகளுடன் கோவிலின் ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கோவில் கோபுரத்தின் அருகே 400 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

கும்பாபிஷேகத்தை காண அதிகாலை முதலே சுற்று வட்டார பகுதிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் குவிந்தனர்.

இதனால் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்ட போது பக்தர்கள் ‘அரோகரா’ கோ‌ஷம் எழுப்பினர்.

இவ்விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம், கலெக்டர் ஆர்த்தி, தாம்பரம் போலீஸ் கமி‌ஷனர் ரவி, செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பூக்கள் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

தாம்பரம், பூந்தமல்லி, ஐய்யப்பன்தாங்கல் பணிமனையிலிருந்து 10 நிமிடத்திற்கு ஒருமுறை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்கள் தப்பிப்பதற்காக கோவில் படிக்கட்டுகளில் சிவப்பு நிற கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்ததோடு ஆங்காங்கே டேங்குகள் மூலமாகவும், கேன்களிலும் குடிநீர் வைக்கப்பட்டு இருந்தன.

வாகனங்கள் நிறுத்துவதற்கு கோவில் பின்புறம் 6 ஏக்கர் நிலத்தில் பார்க்கிங் வசதியும், 5 இடங்களில் மொபைல் டாய்லெட்டும் வைக்கப்பட்டு இருந்தது.

கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி மா.அமுதா, விழா குழு தலைவர் அ.செந்தாமரைகண்ணன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.

இதையும் படிக்கலாம்….
சீதா தேவியின் விரதம் எதற்காக?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.