பொருளாதார நெருக்கடி: இலங்கையிலிருந்து வருவோரை அகதிகளாக அறிவிக்க வேண்டும் – மருத்துவர் இராமதாஸ்.!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதாரம் காரணமாக அங்கு வாழ வழியில்லாத தமிழ் மக்கள், தஞ்சம் தேடி தமிழ்நாட்டுக்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் அவர்கள் அகதிகளாக மத்திய அரசால் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு உணவு, நிதி உள்ளிட்ட உதவிகளை சட்டப்பூர்வமாக தமிழக அரசால் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இலங்கை அரசு கடைபிடித்து வந்த தவறான கொள்கைகளால் மீள முடியாத கடன் சுமையில் சிக்கித் தவித்து வருகிறது. இந்தியா பல்வேறு கட்டங்களாக இலங்கைக்கு உணவு மற்றும் எரிபொருள்களை கடனுக்கு வழங்கி வரும் போதிலும் அங்கு நிலைமை சீரடையவில்லை. இலங்கையில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்ட நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களால் வாழ  முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால், இலங்கையைச் சேர்ந்த தமிழ் மக்கள் தங்களின் உடமைகளை விட்டு விட்டோ, விற்று விட்டோ தஞ்சம் தேடி தமிழ்நாட்டுக்கு தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையிலிருந்து இன்று காலை 15 தமிழர்கள் தனுஷ்கோடிக்கு வந்து சேர்ந்துள்ளனர். அவர்களையும்  சேர்த்து தமிழகத்திற்கு கடந்த சில வாரங்களில் தஞ்சம் தேடி வந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. கடந்த  4 நாட்களில் மட்டும் மொத்தம் 33 பேர் வந்துள்ளனர். அவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் உணவு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படும் போதிலும், அவர்கள் கிட்டத்தட்ட கைதிகளைப் போலவே நடத்தப்படுகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளின் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் மாதம் ரூ.1,500 நிதியுதவி உள்ளிட்ட பல உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றை இப்போது தஞ்சம் தேடி  வருவோருக்கும் வழங்க வேண்டும்; தஞ்சம் தேடி வருபவர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.

ஆனால், தஞ்சம் தேடி வருவோர் அனைவரும் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்களாகவே கருதப்படுவதால், அவர்களுக்கு சட்டப்பூர்வமாக எந்த உதவியும் வழங்க முடியாது. இலங்கையில் போர் நடைபெற்ற போது, தமிழ்நாட்டுக்கு தப்பி வந்தவர்கள் அனைவரும் பன்னாட்டு சட்டங்கள் மற்றும் இந்தியா கையெழுத்திட்ட ஒப்பந்தங்களின்படி அகதிகளாக அறிவிக்கப்பட்டனர். அதனடிப்படையில் அவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் தஞ்சம் தேடி வருவோரை அகதிகளாக அறிவிக்க பன்னாட்டு விதிகள் இல்லை.

 அவர்களுக்கு உணவு, நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்க தமிழக அரசு தயாராக இருந்தாலும் கூட, அவர்கள் அகதிகளாக அறிவிக்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு எந்த உதவிகளையும்  வழங்க முடியாது. அதே நேரத்தில், அவர்களை அகதிகளாக அறிவிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. இலங்கையில் போர் முடிவடைந்த பிறகு தமிழ்நாட்டிற்கு தஞ்சம் தேடி வந்தவர்களுக்கு அகதிகள் என்ற தகுதியை மத்திய அரசு வழங்கவில்லை. இப்போது தமிழ்நாட்டிற்கு வந்தவர்களை அகதிகளாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 1-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதினார். ஆனால், அதன்பின்னர் 25 நாட்கள் ஆகியும் கூட அதன் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

இலங்கையிலிருந்து தஞ்சம் தேடி தமிழகம் வந்துள்ள 75 பேரையும் தமிழக காவல்துறையின் பல்வேறு பிரிவுகளும், மத்திய உளவுத்துறையும் விசாரித்துள்ளன. அந்த விசாரணையில் அவர்கள் அனைவரும்  இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாகத் தான் வாழ முடியாமல் தஞ்சம் தேடி இந்தியாவுக்கு வந்துள்ளனர் என்பதும், அவர்கள் இந்தியாவுக்குள் வந்ததன் பின்னணியில் வேறு தீய நோக்கங்கள் எதுவும் இல்லை என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. இவ்வளவுக்குப் பிறகும் வாழ வழியின்றி வந்தவர்களை அகதிகளாக அறிவிக்காமல், சட்டவிரோத குடியேறிகளாகவே வைத்திருப்பது இந்தியா போன்ற, பன்னாட்டு அரங்கில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் நாட்டுக்கு அழகல்ல.

இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த போது, அங்கிருந்து 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர். அவர்களில் இப்போது 19,233 குடும்பங்களைச் சேர்ந்த 58,547 பேர் மட்டும் தான் 108 அகதிகள் முகாம்களில் உள்ளனர். மீதமுள்ளவர்கள் இலங்கையில் நிலைமை சீரடைந்த பிறகு சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். அதேபோல், இப்போது தஞ்சம் தேடி வருவோரும் விரைவில் தாய்நாட்டிற்கு திரும்பி விடுவார்கள். அவர்களால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது.

இலங்கையிலிருந்து தஞ்சம் தேடி வந்துள்ள 75 பேர் தவிர, மேலும் 60 பேர் 3 மாதங்களுக்கான சுற்றுலா விசாவில் தமிழகத்திற்கு வந்துள்ளனர். விசா முடிவடைந்த பிறகும் இலங்கைக்கு திரும்பப் போவதில்லை என்றும், தமிழகத்திலேயே தங்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இலங்கையில் பொருளாதார நிலை மேலும் மோசமடையும் போது, அங்கிருந்து அதிக எண்ணிக்கையில் தமிழகத்திற்கு தஞ்சம் கேட்டு வருவார்கள். அதிக எண்ணிக்கையிலானவர்களை அகதிகள் தகுதி வழங்காமல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்ற நிலையில் வைத்திருப்பது வேறு வகையான குழப்பங்களுக்கு வழி வகுக்கும்.

எனவே, இலங்கையில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டும், மனிதநேய அடிப்படையிலும் தஞ்சம் தேடி தமிழகத்திற்கு வரும் இலங்கைத் தமிழர்களை அகதிகளாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அதன்மூலம் அவர்களுக்கு சட்டப்பூர்வ உதவிகளை தமிழக அரசு வழங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்” என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.