உக்ரைன் போருக்கு பின் ரஷியாவிடம் அதிகம் கச்சா எண்ணெய் வாங்கிய நாடுகள் எவை?

மாஸ்கோ:
உக்ரைன் ரஷியா போர் 64-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என பல்வேறு நபர்கள் உயிரிழந்துள்ளனர். பல நகரங்கள் போரினால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா மீது அமெரிக்கா உள்பட பல்வேறு மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. இதற்கு பதிலடியாக தங்களிடம் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்கும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் பணமான ரூபெளில் தான் வாங்க வேண்டும் என ரஷியா அதிரடியாக அறிவித்தது.
இந்நிலையில் போர் தொடங்கியதில் இருந்து எந்த நாடு ரஷியாவிடம் இருந்து அதிகமாக கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்து வருகிறது என்ற தகவலை எரிவாயு மற்றும் தூய காற்று ஆராய்ச்சி மையம் என்ற சுயேட்சை ஆராய்ச்சி குழு வெளியிட்டுள்ளது.
இதில், உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடங்கியது முதல் ரஷியாவிடமிருந்து அதிக அளவில் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் வாங்கியது ஐரோப்பிய நாடான ஜெர்மனி என தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் ரஷியாவிடமிருந்து 9.1 பில்லியன் யூரோ அளவிற்கு ஜெர்மனி இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது.  ஜெர்மனி தனது இயற்கை எரிவாயு தேவையில் 35 சதவீதம் ரஷியாவிடமிருந்தே கொள்முதல் செய்கிறது. 
ஜெர்மனி ரஷியா மீது பொருளாதார தடையை விதித்துள்ளபோது கச்சா எண்ணெய் இறக்குமதியை அந்நாட்டிடமே மேற்கொண்டு வருகிறது.
அதேபோல போர் தொடங்கியதில் இருந்து ரஷியாவிடமிருந்து எரிபொருள், இயற்கை எரிவாயு ஆகியவற்றை அதிக அளவில் கொள்முதல் செய்த இரண்டாவது நாடு இத்தாலி என தெரியவந்துள்ளது. ரஷியாவிடமிருந்து 6.9 பில்லியன் யூரோ மதிப்பிலான எரிபொருளை இத்தாலி கொள்முதல் செய்துள்ளது. 3-வது இடத்தில் சீனா கடந்த 2 மாதத்தில் ரஷியாவிடமிருந்து 6.7 பில்லியன் யூரோ மதிப்பிற்கு எரிவாயு, கச்சா என்ணெய் வாங்கியுள்ளது.
ஒட்டுமொத்தமாக போர் தொடங்கியது முதல் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விற்பனை மூலம் ரஷியா மொத்தம் 66.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் ஒட்டுமொத்தமாக எரிவாயு, கச்சா எண்ணெய், நிலக்கரி மூலம் ரஷியாவுக்கு கிடைத்த மொத்த வருவாயில் 71 சதவிகிதம் 44 பில்லியன் யூரோ ஐரோப்பிய யூனியன் நாடுகளிடமிருந்தே வந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.