சென்னை: எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயிலில், கழிப்பறை முறையாக பராமரிக்கப்படாததால், அதைப் பயன்படுத்த முடியாமல் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு தேஜஸ் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள இந்த ரயிலில், ஏசி இருக்கை மற்றும் ஏசி எக்சிகியூடிவ் இருக்கைகளுக்கு முறையே ரூ.1,060, ரூ.2,135 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் பயோ டாய்லெட் எனப்படும் உயிரி கழிப்பறை பொருத்தப்பட்டுள்ளது. தற்போது, இந்த கழிப்பறை முறையாக பராமரிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பயணிகள் கூறும்போது, ‘‘ரயிலில் உள்ள கழிப்பறை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. ரயில் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் அதில் அடைப்பு ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் உள்ளிட்ட பயணிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். டிக்கெட் பரிசோதகரிடம் புகார் செய்தாலும் பயனில்லை. இந்த பிரச்சினை கடந்த ஒரு மாதமாக நீடிக்கிறது’’ என்றனர்.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அனைத்து ரயில்களும் தினசரி தனது பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாக கழிப்பறை, இருக்கைகள் தூய்மை செய்த பிறகுதான் பனிமனையில் இருந்து கிளம்பும். தேஜஸ் ரயிலில் கழிப்பறை பிரச்சினை குறித்து இதுவரை எங்கள் கவனத்துக்கு வரவில்லை. எனினும், இப்பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளும் நேரடியாக புகார் தெரிவிக்கலாம்’’ என்றனர்.