புதுடெல்லி: கரோனா முதல் அலையின் போது புலம்பெயர் தொழிலாளருக்காக மாநிலங்களுக்கு ரூ.11,092 கோடி நிதி அளிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2020-21-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா முதல் அலையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின்போது நாட்டின் பல பகுதிகளிலும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. நாடு முழுவதும் 41,000 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 14 லட்சம் பேர் அதில் தங்கவைக்கப்பட்டனர். 30,000 உணவு முகாம்களும் அமைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது.
வெவ்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களின் உணவு, சுகாதார வசதிகளுக்கான செலவுகளுக்காக மாநிலங்களுக்கு ஏப்ரல் 3, 2020-ல் ரூ.11,092 கோடி விடுவிக்கப்பட்டது. மாநில பேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்திக் கொள்ள மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.