2 ஏக்கர் நிலத்தை பறிக்க 67 வயது லண்டன் பெண்ணை மிரட்டும் நாடகக் காதல் கேங்..! மசினகுடியில் சென்னை மாஃபியா..!

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் பிரீட்டீஸ் பெண்மணிக்கு உதவுவது போல நடித்து காதல் வலையில் வீழ்த்திய ஆங்கிலோ இண்டியன் ஆசாமி ஒருவர் சென்னையை சேர்ந்த கூலிப்படையை ஏவி , அந்த பெண்மணியி பரம்பரை சொத்துக்களான வீடு மற்றும் நிலங்களை அபகரிக்க முயற்சிப்பதாக டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பார்பரா எலிசபெத் வில்லிஸ். 67 வயதான இவர் இன்று சென்னை மயிலாப்பூரில் டிஜிபி அலுவலகத்திற்கு வந்து டிஜிபியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். பார்பரா எலிசபெத் வில்லிஸ் என்ற பெண்ணின் தாத்தா, பாட்டி சுதந்திர இந்தியாவிற்கு முன்பு பிரிட்டிஷ் காலத்தில் இந்தியா வந்துள்ளனர். அப்போது நீலகிரி மாவட்டத்தில் பரவலாக வசித்த பிரிட்டிஷ் குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று.

இங்கிலாந்து அரசு குடும்பத்திற்கு பார்பரா எலிசபெத்தின் குடும்பம் நெருக்கமானவர்கள் எனவும், இவரது சகோதரர் லண்டன் முன்னாள் மேயராக இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நீலகிரி மாவட்டம் மசினங்குடியில் மூன்று தலைமுறைகளுக்கு முன்பிருந்தே இவர்களது குடும்பத்திற்கு சொந்தமான இரண்டு வீடுகள் உடன் கூடிய இரண்டு ஏக்கர் நிலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. பார்பரா எலிசபெத்தின் பெற்றோர் காலத்தில் இங்கிலாந்து சென்றுவிட்டனர் என்றாலும், இவர் இங்கிலாந்திலும், இந்தியாவிலும் வசிக்கும் வகையில் இரட்டை குடியுரிமை பெற்றவர்.

இங்கிலாந்தில் இருந்து அவ்வப்போது வரும் பார்பரா எலிசபெத் மசினகுடியிலுள்ள வீட்டில் தங்கி தங்கள் நிலத்தை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 5 வருடத்திற்கு முன்பு மசினகுடியில் வசிக்கும் ஆங்கிலோ-இந்தியனான டொனால்ட் ஆலென் பார்கலே என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது தனியாக வசித்து வந்த பார்பரா எலிசபெத் வில்லிஸை காதல் வலையில் வீழ்த்திய டொனால்ட் பார்கலே திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்ததாகவும், அவரது வீட்டிலேயே வசித்து வந்ததாகவும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தபெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இங்கிலாந்து பெண்ணின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை எடுத்து வைத்துக் கொண்டு அதில் இருந்து 25 லட்ச ரூபாய் பணத்தை எடுத்து விட்டதாகவும், மேலும், இவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதை நம்பி லட்சக்கணக்கில் மதிப்புடைய வைரம், பிளாட்டினம் நகைகளை டொனால்ட் ஆலென் பார்கவே வாங்கிக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

டொனால்ட் தன்னை மோசடி செய்வதை உணர்ந்ததால் தான் விலகிவிட்டதாகவும் ஆனால் தன்னை திருமணம் செய்துவிட்டதாக தனது பெயரை, தனது கணவன் எனக்கூறி பலரிடமும் லட்சக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்து இருப்பதாகவும் இங்கிலாந்து பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளதாக அவருக்கு துணையாக வந்திருந்த கோவையை சேர்ந்த சமூக ஆர்வலரான மெரினா ஹாக்ஸ் தெரிவித்தார்

மேலும் டொனால்ட் ஆலென் பார்கலே மூலம் அறிமுகமான மார்கஸ் என்ற நபரும் மசினகுடியில் உள்ள பழங்குடி மக்களுக்கு 100 வீடுகளை கட்டித் தரலாம் என தன்னிடம் கூறிவிட்டு தனது பெயர் மற்றும் கையெழுத்தை பயன்படுத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ள எலிசபெத், தற்போது அந்த இருவரும் சேர்ந்து தனது வீட்டையும் இடத்தையும் அபகரித்துக் கொள்ள சென்னையில் இருந்து ரியல் எஸ்டேட் மாஃபியாவை அழைத்து வந்து மிரட்டுவதாக வீடியோ ஆதாரத்துடன் குற்றம் சாட்டியுள்ளார்.

தினம்தோறும் குண்டர்களை அழைத்து வந்து தங்களை மிரட்டி வெளியேற்ற முயல்வதாகவும், அங்குள்ள காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் டிஜிபியை சந்தித்து புகார் அளித்துள்ளதாக மெரினா ஹாக்ஸ் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.