#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் ராணுவ வீரர்கள் 200 பேர் கொல்லப்பட்டதாக ரஷியா தகவல்

01.05.2022
04.20:   உக்ரைனின் மரியுபோல் பகுதியில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்ற ஐ.நா.வின் முயற்சி குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். இந்த  உரையாடலின் போது, ​​உக்ரைனுக்கு இங்கிலாந்து பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவியை தொடர்ந்து வழங்கும் என்றும் ஜான்சன் உறுதியளித்தாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
02.40:  உக்ரைனின் மூன்றாவது பெரிய நகரமும், முக்கிய துறைமுகமுமான ஒடேசாவில் உள்ள விமான நிலைய ஓடு பாதையை ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் மூலம் அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக ஒடேசா விமான ஓடு பாதையை உக்ரைன் விமானப்படை இனி பயன்படுத்த முடியாது என கூறப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிப்பவர்களை அந்த இடத்தில் தங்கியிருக்குமாறும் உள்ளூர் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
01.30:  ரஷிய விமான படையினர் உக்ரைனின் 17 ராணுவ தளங்களை துல்லியமாக தாக்கியதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 23 ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
12.20:  கடந்த மாதம் போரின்போது 40 ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன் போர் விமானி மேஜர் ஸ்டீபன் தரபால்கா உயிரிழந்து விட்டதாக லண்டன் டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.  கோஸ்ட் ஆப் கீவ் என அழைக்கப்படும் அந்த விமானி, மார்ச் 13ந் தேதி எதிரி படைகளுடன் போரிட்டுக் கொண்டிருந்த போது கொல்லப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. அவரது ஹெல்மெட் மற்றும் கண்ணாடிகள் இப்போது லண்டனில் ஏலம் விடப்பட உள்ளதாக டைம்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது
30.4.2022
22:30: உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு, நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து தீவிரமாக செயல்பட விரும்புவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் கூறியிருக்கிறார். ராணுவ தளவாடங்கள் மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் மேக்ரான் உறுதி அளித்துள்ளார்.
 
21:00: உக்ரைனின் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தி வரும் ரஷிய படைகள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஏராளமான தானியங்களைக் கைப்பற்றுவதாக உக்ரைன் விவசாயத்துறை மந்திரி டாரஸ் பிசோட்ஸ்கி தெரிவித்தார். ஜபோரிஜியா, கெர்சன், டோனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் இருந்து பல லட்சம் டன் தானியங்கள் எடுக்கப்பட்டதாக, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்ததாக அவர் கூறினார்.
20:30: கண்ணிவெடிகளை கண்டறிந்து பாதுகாப்பாக அகற்றுவது எப்படி? என்பது தொடர்பாக உக்ரைனைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் மிஞ்சுகோவா உள்ளிட்ட 5 பெண்கள், கொசோவா நாட்டில் பயிற்சி பெற்று வருகின்றனர். உக்ரைனில் நடைபெற்று வரும் போர் முடிவுக்கு வந்தபின், அங்கு வெடிக்காமல் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் அவர்கள் ஈடுபடுவார்கள். 
20:00: போர் தொடங்கியதில் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான மக்களை ரஷியா வெளியேற்றியுள்ளதாக ரஷியாவின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
19:30: உக்ரைனில் உள்ள ரஷியப் படைகளின்  மன வலிமை குறைந்திருப்பதாக பிரிட்டன் ராணுவம் கூறி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.