பெர்லின் : “ஜெர்மனியில் வாழும் இந்தியர்கள் தாய்நாட்டின் தயாரிப்புகளை உலகளவில் எடுத்துச் செல்ல உதவ வேண்டும்,”என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ஜெர்மன் நாட்டில் வசிக்கும் இந்தியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
இங்கு வாழும் இந்தியர்கள் தாய்நாட்டின் தயாரிப்புகளை உலகளவில் எடுத்துச் செல்ல உதவ வேண்டும். கடந்த 2014ல் இந்தியாவில் 200 – -400 ‘ஸ்டார்ட் –அப்’ நிறுவனங்கள் இருந்தன. இப்போது 68 ஆயிரமாக அதிகரித்துள்ளன.
கடந்த 7 – -8 ஆண்டுகளில் பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கே நேரடிப் பரிமாற்றம் வாயிலாக 22 லட்சம் கோடி ரூபாய் இந்திய அரசு வழங்கியுள்ளது. அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது புதிய இந்தியா உருவாக்கத்திற்கும் சான்றாக திகழ்கிறது. மக்கள் வழி நடத்தினால் தான் நாடு முன்னேறும்; இன்றைய இந்தியாவில் மக்கள் தான் உந்து சக்தியாக திகழ்கின்றனர்.
கடந்த 2014ல், 30 ஆண்டுகளுக்குப் பின் முழுப் பெரும்பான்மையுடன் இந்தியர்கள் ஒரு அரசை தேர்ந்தெடுத்ததற்கு காரணம், நாடு விரைவாக வளர்ச்சி பெற வேண்டும் என்ற மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது. மூன்று தலைமுறைகளாக இந்திய அரசியலில் நிலவிய உறுதியற்ற தன்மைக்கு, ஓட்டு இயந்திரத்தில் ஒரு பொத்தானை அழுத்துவதன் வாயிலாக இந்திய வாக்காளர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். நாட்டு மக்கள் இந்தியா விரைவான வளர்ச்சியை விரும்புகின்றனர். அதற்கு அரசியல் ஸ்திரத்தன்மையும், மன உறுதியும் அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement