சென்னை: இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியது. நேரடியாக பிரதமரை சந்தித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி கோரினார். ஆனால், சாதகமான பதில் வராத சூழலில், அனுமதி அளிக்க மத்திய அரசை வலியறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானநகலுடன் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்ப தமிழகத்துக்கு அனுமதிஅளித்து, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மனிதாபிமான செயல் அனைவராலும் பெரிதும் வரவேற்கப்படும். இரு நாடுகளுக்கு இடையே புரிதல் மற்றும் நல்லுறவை மேம்படுத்த உதவும் என்றும் உறுதியாக நம்புகிறேன். அனைத்து துறைகளிலும் நல்லெண்ணம் வளரட்டும்” இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.